T20 WC BAN vs NED : அக்கர்மேன் அரைசதம் வீண்..! வங்காளதேசத்திடம் போராடி தோற்றது நெதர்லாந்து..!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம்-நெதர்லாந்து இடையிலான போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம்-நெதர்லாந்து இடையிலான ஆட்டம் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 சுற்றில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, தொடக்க ஆட்டக்காரராக ஷான்டோவும், செளம்யா சர்காரும் களம் இறங்கினர். 6 ஆவது ஓவரில் செளம்யா சர்கார் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷன்டோவும், லிட்டன் தாஸ், கேப்டன் ஷாகிப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆஃபிப் ஹோசைன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
யாசிர் அலி, விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
நெதர்லாந்து தரப்பில் 15 பந்துகள் வைடு மற்றும் நோ பாலாக வீசப்பட்டது. வேன் மீகெரென், பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் பிரிங்கில், ஷாரிஸ் அகமது, வேன் பீக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
145 ரன்கள் இலக்கு
நெதர்லாந்து அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி நெதர்லாந்து வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களான விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீடே ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
மேக்ஸ் ஓதெளத் (8 ரன்கள்), டாம் கூப்பர் ரன்கள் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். எஞ்சிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக காலின் அக்கர்மேன் 62 ரன்கள் எடுத்தார்.
வங்காள தேச அணியின் அபார பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் காரணமாக நெதர்லாந்து அணி 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வங்களாதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, உலககோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. நசீம் ஷா வீசிய ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போல்டு ஆனார். 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 7 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக முதல் முறையாக ரோகித் சர்மா தலைமை தாங்குவதால், தேசிய கீதம் பாடி முடித்ததும் அவர் உணர்ச்சி வசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.