ஆன்லைன்ல ட்ரோல் பண்றவங்க இந்தியனா? இந்தியா Cap போட்டவன் இந்தியனா? : ஷமிக்காக சண்டைசெய்யும் சேவாக்
இந்திய அணிக்காக ஆடும் ஒவ்வொரு வீரருக்கும் இந்தியன் என்ற உணர்வு அதிகம் என்று முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலககோப்பை டி20 தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 18வது ஓவரின் கடைசி பந்திலே எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக, 18 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18வது ஓவரை வீசிய முகமது ஷமி வீசிய முதல் 5 பந்திலே பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பிறகு, இந்தியாவின் தோல்விக்கு காரணம் முகமது ஷமிதான் என்று சமூக வலைதளங்களில் அவரை பலரும் கேலி செய்து வருகின்றனர். குறிப்பாக, சிலர் அவரது மதத்தை குறிப்பிட்டு கண்டனத்துக்குரிய வகையில் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தவகை விமர்சனங்களுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் முகமது ஷமிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சேவாக் தனது டுவிட்டர் பதிவில், முகமது ஷமி மீது இணையதளத்தில் நடத்தப்படும் விமர்சனங்கள் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவருடன் நிற்கிறோம். முகமது ஷமி ஒரு சாம்பியன். யாரெல்லாம் இந்தியாவிற்காக இந்திய தொப்பியை அணிந்து ஆடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்தியன் என்ற உணர்வு இணையதளத்தில் உள்ள கும்பல்களை விட அதிகம். உங்களுடன் இருக்கிறோம் ஷமி. அடுத்த போட்டியில் பார்ப்போம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்த போட்டிக்கு முன்பு 12 முறை நேருக்கு நேர் மோதியிருந்தது. அனைத்து போட்டியிலும் இந்தியாவே வென்றிருந்தது. ஆனால், நேற்றைய வெற்றியின் மூலம் பாகிஸ்தான் புதிய வரலாறே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயும், கே.எல்.ராகுல் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தொடக்கத்தில் மிகவும் தடுமாறியது. இருப்பினும் விராட்கோலி 57 ரன்களும், ரிஷப்பண்ட் 39 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி 151 ரன்களை எட்டியது. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் சிறப்பாக பேட் செய்து அந்த அணியை வெற்றி பெற வைத்தனர் என்பதே உண்மை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்