நியூயார்க், ப்ளோரிடாவில் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை போட்டிகள்! குஷியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடும் லீக் போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்படுவது அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த சில நாட்களிலே இந்திய அணி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர்களை முடித்துள்ளது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணிகள்? எந்தெந்த பிரிவில் ஆடும் என்ற அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 20 அணிகள் ஆடும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக ஏ, பி, சி மற்றும் டி ஆகிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை:
குழு ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுடன் மோதுகிறது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி நியூயார்க்கில் மோதுகிறது. பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் விளையாடுகிறது. அமெரிக்க அணியுடன் 12ம் தேதி நியூயார்க்கில் மோதுகிறது. கடைசி லீக் போட்டியில் கனடா அணியுடன் 15ம் தேதி ப்ளோரிடாவில் விளையாடுகிறது.
கிரிக்கெட் தற்போது பிரபலமாக உள்ள நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐ.சி.சி. முயற்சி எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் விளைவாகவே நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் விளையாடுகின்றன.
அமெரிக்காவில் லீக்:
இதில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இணைந்து அமெரிக்காவும் நடத்துகிறது. அமெரிக்காவில் பல்வேறு தொழில் நிமித்தமாக இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்துவதற்காகவும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்திய அணி ஆடும் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இந்த முறை அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, இந்திய அணி அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுடன் ஆடும் ஆட்டங்கள் நியூயார்க் மைதானத்தில் நடக்கிறது, நியூயார்க் நகரத்தில் மட்டும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடும் அனைத்து லீக் போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெற இருப்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: T20 World Cup 2024 Schedule: ஜூன் 1ல் தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை! இந்தியா - பாகிஸ்தான் மோதல் எங்கு தெரியுமா?
மேலும் படிக்க: Ranji Trophy: இதுவரை 88 சீசன்கள்! 41 முறை மும்பை சாம்பியன்.. ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள், விக்கெட்கள் லிஸ்ட் இதோ!