(Source: Poll of Polls)
IND vs ENG : இங்கிலாந்தை பழிவாங்க களமிறங்கும் இந்திய அணி.. அரையிறுதியில் இன்று எந்த அணி சம்பவம் செய்யும்..?
2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முதல் முறையாக களம் இறங்குகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை 2024 கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் முடிந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அரையிறுதியின் முதல் போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகிறது.
அதேசமயம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கயானாவில் இரவு 8 மணி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை பழிவாங்க இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முதல் முறையாக களம் இறங்குகின்றன.
சூப்பர்-8க்கான குரூப் 1ல் இருந்த இந்திய அணி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், மற்ற அணிகளின் முடிவுகளை நம்பி சூப்பர்-8க்கு வர வேண்டியிருந்தாலும், சூப்பர்-8ல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை எட்டிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி:
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.
சூப்பர் 8 வரை கலக்கிய இந்திய அணி:
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. குழு லீக் போட்டிகளில் முதலில் இந்திய அணி, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்தியது. கனடாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சூப்பர் 8க்கு தகுதிபெற்ற ரோஹித் படை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மறுபுறம் சூப்பர் 8ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
வானிலை அறிக்கை:
இந்தியா இங்கிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டம் தொடங்கும் முன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக AccuWeather தெரிவித்துள்ளது. எனவே, மழை பெய்ய வாய்ப்பு 35 முதல் 68 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது. இது தவிர போட்டியின் போது மேகமூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்து அணியும் இதுவரை 23 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து - இந்தியா 4 முறை மோதியுள்ளன. அதில், இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணி:
பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி.