IND vs IRE: டி20யில் அதிக மெய்டன்கள் வீசிய பும்ரா.. பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்..!
Jasprit Bumrah: அயர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
நேற்று நடந்த இந்தியா - அயர்லாந்து இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 ஆட்டத்தில் அயர்லாந்திற்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றிபெற்றதற்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர்.
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, 3 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்களை அள்ளினார். மேலும், ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணிக்காக 5வது ஓவரை வீச வந்தார் ஜஸ்பிரித் பும்ரா. அந்த ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். இந்த மெய்டன் ஓவரின் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் விளையாடும் நாட்டிலிருந்து அதிக மெய்டன்கள் வீசிய வீரர் என்ற புவனேஷ்வர் குமாரின் உலகக் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 11 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். இந்த பட்டியலில் புவனேஷ்வர் குமார் 10 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.
முதல் இடத்தில் யார்..?
ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20யில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர்கள் பட்டியலில் உகாண்டாவின் ஃபிராங்க் நசுபுகா 15 மெய்டன் ஓவர்கள் வீசி முதலிடத்தில் உள்ளார். கென்யாவின் ஷெம் என்கோசே 14 மெய்டன் ஓவர்கள் வீசி இரண்டாவது இடத்திலும், 11 மெய்டன் ஓவர்கள் வீசி இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 3வது இடத்திலும் உள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் பும்ரா, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்தார்.
🇮🇳💙 pic.twitter.com/yytDxjWuPp
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) June 5, 2024
நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற பும்ரா:
ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகிய மூன்று போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். இந்த பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பெயர் முதலிடத்திலும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்கள் அடுத்த இடத்திலும் உள்ளன. சர்வதேச டி20 போட்டியில் பும்ரா 5வது முறையாக இந்த விருதை வென்றுள்ளார். மேலும், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவாரா பும்ரா..?
2024 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் விளையாட உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக தோன்றும் நாசாவ் கவுண்டி சர்வதேச போட்டியின் பிட்ச்சில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஒரு முக்கிய பங்கை அளிக்கலாம். பும்ரா இதுவரை பாகிஸ்தானுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி 31 சராசரியில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.