T20 World Cup 2024: நியூயார்க்கில் ஜாலியாக உலா வரும் சூர்யகுமார், ஜடேஜா.. டி20 உலகக் கோப்பைக்காக கிளம்பிய சஞ்சு, ஜெய்ஸ்வால்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து இன்னும் கிளம்பவில்லை.
கடந்த மே 26ம் தேதி 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த ஐபிஎல் 2024 சீசன் நடந்து முடிந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையிலான இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பை 2024ல் பங்கேற்பதற்காக இந்திய அணி முதல் பேட்ச், நேற்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு சென்றடைந்தது.
அதில் கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதற்கான வீடியோ, புகைப்படங்களை பிசிசிஐயின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
நியூயார்க் சென்ற முதல் பேட்சில் யார் யார்..?
கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ் மற்றும் ரிசர்வ் வீரர்களான சுப்மன் கில், கலீல் அகமது ஆகியோர் நேற்று நியூயார்க் நகரம் சென்றனர்.
✈️ Touchdown New York! 🇺🇸👋#TeamIndia 🇮🇳 have arrived for the #T20WorldCup 😎 pic.twitter.com/3aBla48S6T
— BCCI (@BCCI) May 27, 2024
இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் இருந்து 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பே பயிற்சிக்காக அமெரிக்கா கிளம்பினார். ஜூன் 1ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் மோதும் நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஜூன் 5ம் தேதி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக களமிறங்குகிறது. 2024 உலகக் கோப்பையில் இந்திய அணி குழு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. வருகின்ற ஜூன் 9ம் தேதி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கிளம்பாத விராட் கோலி:
கிடைத்த தகவலின்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து இன்னும் கிளம்பவில்லை. இதன் காரணமாக, வருகின்ற ஜூன் 1ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவாரா என்பது கேள்விகுறியாக உள்ளது.
கிளம்பிய இரண்டாம் இந்திய அணி பேட்ச்:
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய அணியின் இரண்டாம் பேட்ச் இன்று காலை நியூயார்க் கிளம்பியது. அதில் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தனர். தாங்கள் உலகக் கோப்பைக்காக நியூயார்க் நகரத்திற்கு கிளம்பியதாக சஞ்சு சாம்சன், அவேஷ் கான் ஆகிய வீரர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளனர்.
ஐபிஎல் லீக் சுற்றியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. அதன் பிறகு ஓய்வுக்காக லண்டன் சென்ற அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, லண்டனில் இருந்து நேரடியாக நியூயார்க் சென்றடைந்தார்.