T20 World Cup 2022: ஜொலிக்காத கே.எல்.ராகுல் அணியில் நீடிப்பது இதற்காகத்தான்... - பயிற்சியாளர் டிராவிட் ஓபன் டாக்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை பெரிய அளவில் ஸ்கோர் பதிவு செய்யாத கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை பெரிய அளவில் ஸ்கோர் பதிவு செய்யாத கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இதுவரை 13 ஆட்டங்களில் கே.எல்.ராகுல் விளையாடியுள்ளார். 121.03 ஸ்ட்ரைக் ரேட்டில் ராகுலின் சராசரி 27.33. அதே காலகட்டத்தில், இரண்டு டாப்-ஆர்டர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 142.49 மற்றும் 138.79 ஸ்ட்ரைக் ரேட்களில் அடித்துள்ளனர். இது ராகுலின் இடத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆனால், இந்திய கிரிக்கெட் அணியைப் பொருத்தவரை அவ்வாறு எந்தவொரு சந்தேகமும் எழவில்லை என்பது ராகுல் டிராவிட்டின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“வார்த்தைகளாலும், செயல்களாலும் கே.எல்.ராகுலுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கி இருக்கிறோம். ராகுல் சிறந்த வீரர் ஆவார். அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இதை ஒப்புக் கொள்வதுடன் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். யாரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவது என்பதில் எனக்கும் ரோகித்துக்கும் எந்தவொரு சந்தேகமும் இல்லை. கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவில் சீதோஷன நிலைக்கு ஏற்ப விளையாடக் கூடிய திறன் படைத்தவர் கே.எல்.ராகுல். ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் மீண்டு வருவார் என்று நம்புகிறோம்” என்றார் டிராவிட்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் 33ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தும், இங்கிலாந்தும் மோதின.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழை குறுக்கீடு இல்லை. நாளை இந்தியா-வங்கதேசம் இடையே சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் 35ஆவது ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டம் அடிலெய்டில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 1.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. வங்கதேச அணி நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத் தெடார்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணியை வங்கதேசம் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரூப் 2 பிரிவில் 2 தோல்வி ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி அதில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. கடைசியாக 30ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனினும், ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். இதனிடையே, வானிலையும் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய எந்தவொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்படவில்லை.