Shreyas Iyer: கடுமையாக எச்சரித்த பிசிசிஐ! மும்பை அணிக்காக ரஞ்சியில் களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!
பிசிசிஐ மற்றும் ரோஹித் சர்மாவின் எச்சரிக்கையை பார்த்து, ஷ்ரேயாஸ் மேலும் சர்ச்சையைத் தவிர்க்க ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
ரஞ்சி டிராபியில் அரையிறுதிக்கு முன்னதாக மும்பை அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர் உடல்தகுதி பெற்று ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார்.
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி வருகின்ற மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. இதில், பலமிக்க மும்பை அணி தமிழ்நாடு அணியை மும்பையில் உள்ள பிகேசி மைதானத்தில் சந்திக்கிறது. கிடைத்த தகவலின்படி, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஷ்ரேயாஸ் ஐயர் தனது பெயரை உறுதி செய்துள்ளதாகவும், மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி அரையிறுதியில் விளையாட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, முதுகுவலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் மும்பையின் கடைசி இரண்டு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஷ்ரேயாஸ் ஐயர் 35, 13, 27 மற்றும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
தமிழ்நாடு அணிக்கு வந்த வாஷிங்டன் சுந்தர்:
இதற்கிடையில் தமிழ்நாடு அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மும்பைக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் விளையாட வந்தனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தர்மசாலா டெஸ்ட் மார்ச் 7ம் தேதி முதல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிகள் முடிவடையும் என்பதால், வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி விடுவித்தது.
ஷ்ரேயாஸ் ஐயரை எச்சரித்த பிசிசிஐ:
ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுவலி காரணமாக மும்பை அணிக்காக காலிறுதிப் போட்டியில் விளையாட மறுத்துவிட்டார். ஆனால், ஷ்ரேயாஸ் உடல்தகுதியுடன் இருப்பதாகவும் தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியிருந்தது.
ரஞ்சி டிராபியில் ஷ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் விளையாடாததை அடுத்து , பிசிசிஐ கண்டித்து சர்வதேச போட்டிகளில் விளையாட அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது கட்டாயம் என்று தெரிவித்தது. ரஞ்சி விளையாடிய பின்னரே வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை வாரியமும் கொண்டு வரும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார். இதற்கிடையில், மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயாஸ் மற்றும் இஷான் ஆகியோரையும் பிசிசிஐ நீக்கலாம் என்றும் செய்திகள் வந்தன. ஷ்ரேயாஸ் கிரேடு பி ஒப்பந்தத்திலும், இஷான் கிரேடு சி ஒப்பந்தத்திலும் உள்ளனர்.
ராஞ்சி டெஸ்ட் முடிந்ததும், கேப்டன் ரோஹித் சர்மாவும், உள்நாட்டு தொடரில் விளையாட ஆர்வமில்லாத வீரர்களை டெஸ்ட் அணியில் சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். இதில், ரோஹித் சர்மா ஷ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷானைதான் குறிவைத்து பேசினார் என்று கூறப்பட்டது. இந்த இரண்டு வீரர்களும் ரஞ்சியில் விளையாடாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இப்போது, பிசிசிஐ மற்றும் ரோஹித் சர்மாவின் எச்சரிக்கையை பார்த்து, ஷ்ரேயாஸ் மேலும் சர்ச்சையைத் தவிர்க்க ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
அரையிறுதி போட்டிகள் எப்போது..?
ரஞ்சி டிராபியின் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் மார்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் அணி நாக்பூரில் விதர்பா அணியை எதிர்கொள்கிறது மற்றொரு அரையிறுதியில் மும்பை அணி, தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. இதில், வெற்றிபெறும் அணிகள் மார்ச் 10ம் தேதி நடைபெறும் ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டியில் விளையாடும்.