Rohit Sharma: சூப்பர் ஓவரில் ரோஹித்தின் திடீர் முடிவு; கதிகலங்கிப்போன ஆஃப்கான் வீரர்கள்; ஹிட்மேனை கொண்டாடும் ரசிகர்கள்
Rohit Sharma: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா மட்டும் இரண்டு சூப்பர் ஓவர்களிலும் எடுத்த ரன்களுடன் சேர்த்து மொத்தம் 146 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த ஆண்டு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலில் கட்டாயம் நேற்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி இடம் பெறும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டியில் இரண்டு முறை சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நான் - ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று கொண்டு இருந்தபோது கடைசி ஒரு பந்தில் இந்திய அணிக்கு 2 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. உடனே ரோகித் சர்மா ரிடையர் - ஹட் செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு ரிங்கு சிங் வந்தார். இது ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரோகித் சர்மாவின் இந்த செயல் குறித்துதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேசிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் டூபே மற்றும் சஞ்சு சாம்சன் வரை அனைவரும் ஏமாற்ற, அணியை சரிவில் இருந்து மீட்கவேண்டிய பொறுப்பு களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ரிங்கு சிங்கிற்கும் இருந்தது. இருவரும் கிட்டத்தட்ட 12வது ஓவர் வரை நிதானமாகவே விளையாடினார்கள். அதன் பின்னர் பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் பறந்தது. ரோகித் சர்மா தனது அரைசதத்தை 41 பந்துகளில் எட்டினார். அசால்டாக சிக்ஸர் விளாசிய ரோகித் சர்மாவுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ரிங்கு சிங்கும் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ரோகித் தனது சதத்தை பூர்த்தி செய்ததும், ரிங்கு தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். இருவரும் இறுதிவரை களத்தில் இருந்தனர். ரோகித் 69 பந்துகளில் 11 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 121 ரன்கள் குவித்தும், ரிங்கு 39 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 69 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது.
இமாலய இலக்கை ஆஃப்கான் அணி துரத்தி பிடிக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தாலும் ஆஃப்கான் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தினால் 16 ரன்கள் குவித்தனர். இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் பந்தில் ரோகித் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தினை ரோகித் சிக்ஸருக்கு விரட்ட 5வது பந்தில் பவுண்டரிக்கு விளாச முயன்றார். ஆனால் ஒருரன் மட்டுமே கிடைத்தது. தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான் - ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றுகொண்டு இருந்த ரோகித் தனது விக்கெட்டினை ரிடையர் - ஹட் செய்து வெளியேறினார். இது பார்வையாளர்களுக்கு மட்டும் இல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்தது மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கும் செய்துள்ளார் ரோகித். இதனால் கடும் சோர்வுக்கு உள்ளானார். கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை. ஜெய்ஸ்வால் பவுண்டரி விளாசினால் ஒரு பிரச்னையும் இல்லை. அதுவே ஓடி ரன்கள் எடுக்கவேண்டும் என்றால் ஆஃப்கான் வீரர்களின் டார்கெட் ரோகித் சர்மாவின் விக்கெட்டாகத்தான் இருக்கும். இதனால் நான் - ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டினை ரிடையர்- ஹட் செய்து வெளியேறினார். கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த முடிவு மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகின்றது. ரோகித்தின் செயல் என்னவென்று புரியாமல் குழம்பி நின்ற ஆஃப்கான் அணி வீரர்கள் கள நடுவரை முறையிட ஆரம்பித்துவிட்டார்கள். கள நடுவர் விளக்கிய பின்னர் ஆஃப்கான் வீரர்கள் அமைதியானார்கள்.
முதல் சூப்பர் ஓவர் டிராவில் முடிந்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழக்க, 5வது பந்தில் ரோகித் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் ஆஃப்கான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 12 ரன்களை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான் அணி 3 பந்துகளை எதிர்கொண்டு 2 விக்கெட்டுகளையும் இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. போட்டி முழுவதும் கேப்டன் ரோகித் சர்மாவின் அர்பணிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக முதல் சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை விட்டுக்கொடுத்து, அணியின் வெற்றிக்காக உடன் நின்றது அனைவரது மத்தியிலும் மீண்டும் ஒருமுறை அவருக்கு பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது. நேற்றைய போட்டியில் மட்டும் ரோகித் சர்மா மொத்தம் 146 (121+14+11)ரன்கள் விளாசியுள்ளார். தான் தனது விக்கெட்டினை விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறினால் தனது ஃபிட்னஸ் தொடர்பாக விமர்சனங்கள் எழக்கூடும் என்பது தெரிந்தாலும் அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதால் ரோகித் வெளியேறியது மீண்டும் ஒருமுறை அவரது செல்ஃப்லெஸ் கேப்டன்சியைக் காட்டுகின்றது என கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.