எனது ஃபேவரிட் ஜெர்ஸியில் 15 ஆண்டுகள் : ரோஹித் சர்மா செண்டிமெண்ட் ட்வீட்
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் பதினைந்து வருடங்கள் நிறைவு செய்ததற்காக ரசிகர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் பதினைந்து வருடங்கள் நிறைவு செய்ததற்காக ரசிகர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா. அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்த கடிதத்தில்,
“எல்லோருக்கும் வணக்கம்,
இந்தியாவுக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 15 வருடங்களை நிறைவு செய்கிறேன். இது என்ன மாதிரியான ஒரு பயணம், நிச்சயமாக இதனை என் வாழ்நாள் முழுவதும் நான் நேசிப்பேன்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் நான் இன்றைய நிலையில் இருக்கும் விளையாட்டு வீரராக மாற உதவிய நபர்களுக்கு தனியானதொரு நன்றி.
மேலும் கிரிக்கெட் பிரியர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவருக்கும்....
உங்கள் அன்பு மற்றும் அணிக்கான ஆதரவுதான் தவிர்க்க முடியாமல் வரும் அனைத்து தடைகளையும் நாம் கடக்க உதவுகிறது.
நன்றி,
ஆர்.எஸ்.”
என எழுதியுள்ளார்.
𝟭𝟱 𝘆𝗲𝗮𝗿𝘀 in my favourite jersey 👕 pic.twitter.com/ctT3ZJzbPc
— Rohit Sharma (@ImRo45) June 23, 2022
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி இந்தாண்டு 11 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உலககோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தலைமையின்கீழ் இந்திய அணி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ரோஹித் ஷர்மா தலைமை ஏற்று விளையாடிய 11போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணியை கேஎல் ராகுல் வழிநடத்தினார். இவரது கீழ் விளையாடிய 4 போட்டிகளும் தோல்வி மட்டுமே மிஞ்சியது.
அதேபோல், இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று பெயர் எடுத்த விராட் கோலி தலைமையில்கீழ் இந்தாண்டு விளையாடிய இந்திய அணி 1 போட்டிகளில் விளையாடி அதிலும் தோல்வியை சந்தித்தது. தற்போது இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலக, அவருக்கு பதிலாக இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் இவரது தலைமையின்கீழ் இந்திய அணி இதுவரை 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதிலும் இந்திய அணிக்கு தோல்வியே கிடைத்தது. இந்தநிலையில், இன்னும் சில மாதங்களில் இந்திய அணி டி 20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது.