Ranji Trophy 2024: ரஞ்சி கோப்பை...அரையிறுதியில் வீழ்ந்த தமிழ்நாடு! இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை!
ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு அணி.
ரஞ்சி கோப்பை தொடர்:
விறுவிறுப்பாக தொடங்கிய ரஞ்சி கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி தமிழ்நாடு அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தமிழ்நாடு vs மும்பை:
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து மும்பை அணி தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷீர் கான் 24 ரன்களுடனும், மொஹித் அவஸ்தி ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர்.
இதில் அவஸ்தி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இவ்வாறாக 106 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி. அப்போது ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் தோமர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தங்களது நிதான ஆட்டத்தின் மூலம் மும்பை அணியை மீட்டனர். அதன்படி 89 வது பந்தில் ஷர்துல் தாக்கூர் 100 ரன்களை கடந்தார். அதன்படி, 104 பந்துகளில் 109 ரன்களை எடுத்தார். இவ்வாறாக மும்பை அணி 378 ரன்கள் எடுத்தது.
தோல்வி அடைந்த தமிழ்நாடு அணி:
இதனை அடுத்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது தமிழ்நாடு அணி. அதன்படி தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரராக சாய் சுதர்சன் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியர் களம் இறங்கினார்கள். இருவரும் ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர், வந்த பாபா இந்திரஜித் மட்டுமே ஒரு அளவிற்கு சிறப்பாக விளையாடினார். அந்த வகையில் 70 ரன்களை எடுத்தார். ஆனால், பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தமிழ்நாடு அணி. அதன்படி, 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 48 வது முறையாக மும்பை அணி ரஞ்சி கோப்பையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!