Punjab Kings: பஞ்சாப் கிங்ஸின் பங்கு யாருக்கு? ப்ரீத்திக்கு குட் நியூஸ் வருமா?
ப்ரீத்தி ஜிந்தாவின் ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகிறது பஞ்சாப் கிங்ஸ். அந்தவகையில் இதுவரை ஐபிஎல் கோப்பையை அந்த அணி வென்றதில்லை என்றாலும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கும், ஒரு முறை பிளே ஆஃப் சுற்றிலும் விளையாடி இருக்கிறது. அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு சீசன்களிலும் செய்யப்பட்டாலும் கோப்பையை வென்றதில்லை என்ற சோக வரலாறு அந்த அணியை பின் தொடர்கிறது.
ஆனால் ப்ரீத்தி ஜிந்த அந்த அணி எவ்வளவு மோசமாக விளையாடினாலும் ஆதரவு தெரிவித்து வருபவர்.அந்தவகையில் கடந்த சில சீசன்களாக அந்த அணிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் தான் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசன் 18க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இதனிடையை பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சிக்கல் ஒன்றில் சிக்கியுள்ளது. அதாவது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நெஸ் வாடியா, மோகித் பர்மன், கரண் பால் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் தான் உரிமையாளர்களாக இருக்கின்றன. இதில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் தலா 23 சதவிகித பங்குகளை வைத்துள்ள நிலையில், மோகித் பர்மன் 48 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்.
நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா:
மீதமுள்ள 6 சதவிகித பங்குகளை கரண் பால் வைத்துள்ளார். தற்போது மோகித் பர்மனிடம் உள்ள 48 சதவிகித பங்குகளில் 11.5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து ப்ரீத்தி ஜிந்தாவின் ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோகித் பர்மன் பஞ்சாப் அணியின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.