அமெரிக்க லீக்கில் பங்கேற்ற வீரர்கள்.. விளையாட அனுமதி பெறாததால் பாகிஸ்தான் நோட்டீஸ்.. குடியுரிமை பெற திட்டமா?
யுஎஸ்ஏ மைனர் லீக்கின் விதிகளின்படி, ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், தனது சொந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றவுடன் மட்டுமே உள்ளூர் வீரராக விளையாட தகுதி பெற முடியும்.
அமெரிக்காவில் நடக்கும் லீக் போட்டிகளில், தடையில்லா சான்றிதழை (என்ஓசி) பெறாமல் பங்கேற்கும் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் வீரர் ஃபவாத் ஆலம் அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் பிரபலமடையும் கிரிக்கெட்
அமெரிக்காவில் கிரிக்கெட் லீக் போட்டிகள் மூலம் பிரபலமடையத் தொடங்கி விட்டன. அடுத்த டி20 உலகக்கோப்பையை அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் உடன் இணைந்து நடத்த இருக்கிறது. இந்த நிலையில் அந்த நாட்டு லீக் கிரிக்கெட்டில் ஆட பலர் விருப்பம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் இல் ஆடமுடியாத பாகிஸ்தான் வீரர்கள் பலர் அதில் ஆடுகின்றனர். தற்போது, சோஹைப் மக்சூத், அர்ஷத் இக்பால், ஹுசைன் தலாத், அலி ஷபிக், இமாத் பட், உஸ்மான் ஷென்வாரி, உமைத் ஆசிப், ஜீஷான் அஷ்ரஃப், சைஃப் பதார், முக்தார் அகமது மற்றும் நௌமன் அன்வர் உட்பட பல பாகிஸ்தான் வீரர்கள் அமெரிக்காவில் விளையாடுகிறார்கள்.
தடையாக வந்த தடையில்லா சான்றிதழ்
இதில் ஆலம் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் சில லீக்குகளில் ஹசன் கான், சமி அஸ்லாம், ஹம்மாத் ஆசம், சல்மான் அர்ஷத், முஸாதிக் அகமது, இம்ரான் கான் ஜூனியர் மற்றும் அலி நசீர் ஆகிய பாகிஸ்தான் வீரர்களும் அமெரிக்கா செல்வதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம், NOC பெறவில்லை. ஆனால், ஆலம் உட்பட சில வீரர்கள் விசிட் விசாவில் இருப்பதையும், அமெரிக்கா செல்வதற்கு முன்பு வாரியத்திடம் தெரிவித்திருந்ததையும் வாரியத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியது. அது போக ஆலம் உட்பட சில வீரர்கள் அமெரிக்காவின் கிரீன் கார்டு பெரும் தகுதியுடைய விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறும் வீரர்கள்
ஒன்றரை ஆண்டுகளில் அவர்களுக்கு கிடைக்கும் அந்த கிரீன் கார்டு மூலம் அவர்கள் அமெரிக்காவில் குடியேற முடியும் என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலமின் மாமனாரான முன்னாள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மன்சூர் அக்தரும் ஒரு அமெரிக்க நாட்டவராக மாறியுள்ளார். அவர் ஹூஸ்டனில் குடியேறியுள்ளார். முன்னாள் வீரர்களான சமி அஸ்லாம், ஹம்மாத் ஆசம், நௌமன் அன்வர், ரமீஸ் ராஜா ஆகியோர் ஏற்கனவே, அமெரிக்காவில் குடியேறி தற்போது கிரீன் கார்டு வைத்திருப்பவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ்ஏ லீக்கின் விதிகள் கூறுவது என்ன?
யுஎஸ்ஏ மைனர் லீக்கின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், தனது சொந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றவுடன் மட்டுமே உள்ளூர் வீரராக விளையாட தகுதி பெற முடியும். சர்வதேச அல்லது தங்கள் சொந்த உள்நாட்டு சீசன்களில் இருந்து ஓய்வு பெற விரும்பாத வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாக மட்டுமே ஆட முடியும். அவர்களது அணிகள் அவர்களுக்கு கிரீன் கார்டு அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
புதிதாக என்ன சிக்கல்?
ஆரம்பத்தில், யுஎஸ் மைனர் லீக் ஒரு அமைப்பாகச் செயல்பட்டு, அவர்களுக்கு ஒர்கிங் விசா ஒதுக்கித் தந்து, அமெரிக்காவிற்கு வீரர்களை அழைத்தது. இறுதியில் அவர்கள் கிரீன் கார்டைப் பெறவும் வழிவகுத்தது. ஆனால் இப்போது, லீக்கில் உள்ள அணிகள் தங்கள் வீசா ஒதுக்கீட்டிலிருந்து வீரர்களை நேரடியாக அழைக்க வேண்டி உள்ளது. வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்பதற்கு முன்பு NOC வாங்குவதற்கு $10,000 செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை முன்னர் PCB செயல்படுத்தியிருந்தது. ஆனால் USA லீக்கில் உள்ள அணிகள் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தத் தயங்குகின்றன. இதுவே பல வீரர்களை அமெரிக்காவுக்கு குடியேறும் சிந்தனைக்கு தள்ளி உள்ளது.