Pak Break India Record : இந்தியாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் - ரிஸ்வான்!
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி இந்தியாவின் ரோகித் - கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று அந்த நாட்டில் உள்ள கராச்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 43 ரன்களும், ஷமரா ப்ரூக்ஸ் 49 ரன்களையும் அதிரடியாக எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரண் அதிரடியாக ஆடி 37 பந்தில் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 64 ரன்களை எடுத்தார். கடைசியில் ப்ராவோ ஆட்டமிழக்காமல் 34 ரன்களை எடுத்தார்.
பின்னர், 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் அபாரமான தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ரன்களை குவித்தனர். முகமது ரிஸ்வான் 87 ரன்களும், பாபர் அசாம் 79 ரன்களும் குவித்ததாலும், ஆசிப் அலி கடைசியில் அதிரடியாக ஆடி 7 பந்தில் 21 ரன்களை எட்டியதாலும் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டிப்பிடித்தது. பாகிஸ்தான் அணியின் டி20 அதிகபட்ச ரன் சேசிங் இதுவே ஆகும்.
இந்த போட்டி மூலம் பாகிஸ்தான் அணி இந்தியாவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. இதுவரை டி20 போட்டிகளில் அதிக சதங்களை அடித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவுமே தங்கள் வசம் வைத்திருந்தனர். முகமது ரிஸ்வானும்- பாபர் அசாமும் நேற்றைய சதக்கூட்டணி மூலம் இந்த சாதனையை முறியடித்தனர்.
முகமது ரிஸ்வான்- பாபர் அசாம் ஜோடி 27 போட்டிகளில் 1473 ரன்களை குவித்துள்ளது. இவற்றில் 6 சதக்கூட்டணியும், 4 அரைசதக் கூட்டணியும் அடங்கும். இந்தியாவின் ரோகித் சர்மா- கே.எல்.ராகுல் கூட்டணி 27 போட்டிகளில் 1,535 ரன்களை குவித்துள்ளது. இவற்றில் 5 சதங்களும், 8 அரைசதக் கூட்டணியும் அடங்கும். மூன்றாவது இடத்தில் வில்லியம்சன் – மார்டின் கப்தில் பார்ட்னர்ஷிப்பும் அடங்கும்.
உலககோப்பை டி20 தொடரில் இந்தியாவிற்கு எதிராக இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் பாகிஸ்தானை வெற்றி பெறவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்