Catch Efficiency WC 2023: உலகக் கோப்பையில் கேட்ச் பிடிப்பதில் மாஸ் காட்டும் இந்திய அணி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரு தோல்விகளை கூட சந்திக்காமல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எடுக்கப்பட்ட பத்து விக்கெட்டுகளில் மொத்தம் 7 விக்கெட்டுகளை கேட்ச் மூலம் தான் இந்தியா கைப்பற்றியது. அந்த போட்டியில் இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் மட்டும் 2 கேட்ச்களை பிடித்தார்.
மாஸ் காட்டும் இந்தியா:
அதேபோல், கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி. அந்த 8 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் கேட்ச் மூலம் பெறப்பட்டவை தான். இதனிடையே, இந்தியா தனது மூன்றாவது லீக் போட்டியில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடியது இந்திய அணி. அதன்படி, பாகிஸ்தான் அணியை 42.5 ஓவர்களிலேயே சுருட்டியது இந்தியா.
கேட்ச்கள் பிடிப்பதில் இந்தியா அபாரம்:
அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்களைத்தான் எடுத்தது. இதில் 3 விக்கெட்டுகளை இந்திய அணி கேட்ச் மூலம் தான் பெற்றது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்தியா. இதில் முதலில் போட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி எடுத்த 8 விக்கெட்டுகளில் மொத்தம் 5 விக்கெட்டுகள் கேட்ச் மூலம் இந்திய அணி கைப்பற்றியது. இப்படி இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் சிறப்பான ஃபீல்டிங்கை வெளிபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஃபீல்டிங்கை தரவரிசையில் இந்திய அணி 91 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து அணியும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் இருக்கிறது. நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணியும், ஐந்தாவது இடத்தில் வங்கதேச அணியும் இருக்கிறது.
மேலும் படிக்க: Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய மலிங்கா! பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் வேகப்புயல்
மேலும் படிக்க: Aus vs Pak: ‘வார்னர்-னா ஃபயரு’ புஷ்பா ஸ்டைலில் சதத்தை கொண்டாடிய டேவிட் வார்னர் - வீடியோ இதோ!