ODI World Cup 2023: சேப்பாக்கத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்.. சென்னையில் இன்று எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்..?
சென்னையில் இந்த போட்டியை தொடர்ந்து, அக்., 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
உலகக் கோப்பை 2023ல் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் இந்த போட்டியை தொடர்ந்து, அக்., 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இந்த போட்டியையொட்டி சேப்பாக்கம் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் நாட்களில் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகரக் காவல் துறை போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போக்குவரத்து மாற்றம்:
கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சேப்பாக்கம் பகுதியில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கிரிக்கெட் மைதானத்தை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இதன்படி விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பாரதிசாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து இந்த சாலைக்கு வாகனங்கள் செல்லலாம். இருப்பினும், வாலாஜா ரோடு - பெல்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து பெல்ஸ் ரோடு வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கண்ணகி சிலை பகுதியில் இருந்து வரும் மாநகர பஸ்கள் பெல்ஸ் ரோடுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த பேருந்துகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ரத்னா கஃபே சந்திப்பு வழியாக செல்லலாம்.
பாரதி சாலையில் உள்ள ரத்னா கஃபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் யு-டர்ன் எடுத்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலையில் செல்லலாம். பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலைக்கு நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி எப்படி இருக்கும்?
இந்திய இளம் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். டெங்கு காய்ச்சலில் இருந்து அவர் முழுமையாக குணமடைவது கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரலாம். சேப்பாக்கின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. எனவே இந்திய அணி இங்கு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடலாம். அதாவது, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் உள்ளூர் நாயகன் ரவிசந்திரன் அஷ்வினும் பிளேயிங்-11ல் இடம் பெறலாம்.
இன்றைய ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் முழுமையாக குணமடையவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில்/இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் .
கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி விவரம்:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.