NZ vs AUS T20 Final: போடு தகிட.. தகிட.. இன்னும் 30 ரன் தான்.. புதிய சாதனையின் விளிம்பில் வார்னர்..!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டேவிட் வார்னர் 30 ரன்கள் எடுத்தால் டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பார்.
இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. இதுவரை நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டியானது துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை ஒருமுறை கூட டி 20 உலகக்கோப்பை கோப்பையை வென்றதில்லை. எனவே இரு அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர முயற்சியில் ஈடுபடும்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட வார்னர், டி 20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து நல்ல பார்மில் இருந்து வருகிறார். இதுவரை அவர் ஆடிய 6 போட்டிகளில் 2 அரைசதம் உள்பட 236 ரன்கள் குவித்துள்ளார். அணியில் தற்போது இடம்பெற்றுள்ள மற்ற ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் இன்னும் 150 ரன்களை கூட கடக்கவில்லை.
இன்று நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மற்ற ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பார்முக்கு திரும்பினால் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் கோப்பையை வெல்லும். இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், 30 ரன்கள் எடுத்தால் புதிய சாதனை ஒன்றை தனதாக்கி கொள்வார்.
அதன்படி, இதுவரை நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மேத்யூ ஹேடன் முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் 265 ரன்கள் குவித்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக வாட்சன் 2012 ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் 249 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தநிலையில், இன்று நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டேவிட் வார்னர் 30 ரன்கள் எடுத்தால் டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பார்.
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் இதுவரை 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 9 போட்டிகளிலும், நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்