SA vs IND: ’விராட் கோலியை விட ரவீந்திர ஜடேஜா மீது தான் பொறாமை... ஆனால்.. உடைத்து பேசிய அஸ்வின்!
ரவீந்திர ஜடேஜா மீது பொறாமை இருப்பதாகவும் ஆனால் அவர் இல்லை என்றால் தான் இல்லை என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று வடிவிலான போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பைக்கு பின்னர் வெளிநாட்டில் விளையாடும் முதல் போட்டி இது என்பதால் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேபோல், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளுக்கு இந்த தொடர் முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதேநேரம், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.
இதனிடையே, இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் ரவிந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் சிறப்பாக செயல்படுவது இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.
ஜடேஜா மீது பொறாமை:
இந்நிலையில், விராட் கோலியை விட தமக்கு ஜடேஜா மீது தான் பொறாமை இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அஸ்வின், “ஒரு நபர் மீது நான் எப்போதும் பொறாமையுடன் இருப்பேன். அது தற்சமயத்தில் மகத்தான கிரிக்கெட்டராகவும், அதிகமாக ஈர்க்கப்படுபவராகவும் இருக்கும் விராட் கோலி தான்.
ஆனால் அவரை விட பொறாமைப்படும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா. ஜடேஜாவுக்கும் எனக்குமான பயணம் வித்தியாசமானது. ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவார். அதே போல ஃபீல்டிங் செய்யும் போது அபாரமாக செயல்படுவார்.
அவர் இல்லாமல் நான் இல்லை:
பேட்டிங்கில் மிகவும் எளிமையாக விளையாடுவார். அந்த வகையில் பெரும்பாலான நாட்களில் அவர் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை நான் வெளிப்படுத்துவதில்லை. சில காரணங்களுக்காக இதை நான் நீண்ட நாட்களாக சொல்லாமல் இருந்தேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், “ ஆனால் இதை அவரிடம் சொல்வதற்கான வழி எனக்கு கிடைத்தது. அதனால் எங்களுக்குள் யார் சிறந்தவர் என்ற போட்டியும் இருந்தது. உண்மை என்னவென்றால் எங்களால் ஒருவர் இன்றி மற்றொருவர் இருக்க முடியாது. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Team India Squad: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20, ODI தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு!
மேலும் படிக்க: IND vs AUS 4th T20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா... சமன் செய்யுமா ஆஸ்திரேலியா! வெற்றி வாய்ப்பு யாருக்கு?