Legends League Cricket : இந்தியா மகாராஜாஸ் - வேர்ல்ட் ஜையண்ட்ஸ் இன்று மோதல்..! மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்..!
லெஜண்ட் லீக் கிரிக்கெட்டின் காட்சிப் போட்டியில் இந்தியா மகாராஜாஸ் - வேர்ல்ட் ஜியான்ட்ஸ் அணிகள் இன்று இரவு நேருக்கு நேர் மோதுகின்றன.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் சிறப்பு காட்சிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மகாராஜா அணியும், வேர்ல்ட் ஜியான்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்தியா மகாராஜா அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான கங்குலி கேப்டனாக இருப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரால் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அசத்திய சேவாக் இந்திய மகாராஜா அணிக்கு கேப்டனாக களமிறங்குகிறார்.
#LLCT20 is celebrating #AzadiKaAmritMahotsav with a special T20 match between @IndMaharajasLLC & @WorldGiantsLLC today at Eden Gardens, Kolkata.
— Legends League Cricket (@llct20) September 16, 2022
#BossLogonKaGame #LegendsLeagueCricket pic.twitter.com/OF9HW7y4nC
அதேபோல, வேர்ல்ட் ஜியான்ட்ஸ் அணிக்கு கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்ட இயான் மோர்கன் பங்கேற்க இயலாத சூழலில், அவருக்கு பதிலாக கேப்டனாக முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலீஸ் களமிறங்குகிறார்.
சேவாக் தலைமையிலான இந்திய மகாராஜா அணியில் முகமது கைப், யூசூப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான், பார்தீவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜொகிந்தர் ஷர்மா, ரீடிந்தர்சிங் சோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜாக் காலீஸ் தலைமையிலான வேர்ல்ட் ஜியான்ட்ஸ் அணியில் சிம்மன்ஸ், கிப்ஸ், சனத் ஜெயசூர்யா, மாட் பிரியார், நாதன் மெக்கல்லம், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின், ஹாமில்டன் மசகட்சா, மஸ்ரபி மோர்டசா, அஸ்கர் ஆப்கன், மிட்செல் ஜான்சன், ப்ரெட் லீ, கெவின் ஓ ப்ரையன், டேனீஷ் ராம்தின் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இன்றைய போட்டிக்கு பிறகு அடுத்து வரும் நாட்களில், பிரதான தொடர் தொடங்க உள்ளது. அந்த தொடரில் இந்திய கேபிடல்ஸ், மணிபால் டைகர்ஸ், பில்வாரா கிங்ஸ், குஜராத் ஜியான்ட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன. இதில், குஜராத் ஜியான்ட்ஸ் அணிக்கு கேப்டனாக சேவாக், இந்தியா கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக கவுதம் கம்பீர், மணிபால் டைகர்ஸ் அணிக்கு ஹர்பஜன்சிங், பில்வாரா கிங்ஸ் அணிக்கு இர்பான் பதான் களமிறங்குகின்றனர்.