உலகக்கோப்பைக்காக நியூசிலாந்து அணிக்கு திரும்பும் வில்லியம்சன்.. ஆனா! கேப்டனா இல்ல.. அப்போ?
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் ஆலோசகராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதே திட்டமிட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நியூசிலாந்து அணிக்கு அவர் ஆலோசகராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டேட் தெரிவிக்கையில், “அனுபவமிக்க நியூசிலாந்து அணியின் ஒயிட் பால் கேப்டன் கேன் வில்லியம்சன், உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா செல்லும் நியூசிலாந்து அணிக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன்.
வில்லியம்சன் தனது வலது முழங்காலில் முன்புற தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்போது அதற்கான ஓய்விலும் இருக்கிறார்.” என தெரிவித்தார்.
என்னாச்சு வில்லியம்சனுக்கு..?
ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. நியூசிலாந்து சென்றபோது கேன் வில்லியம்சனுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில், கேன் வில்லியம்சனின் அவரது வலது முழங்காலில் உள்ள முன்பக்க தசைநார் கிழிந்ததால், தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஓய்வில் இருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி விளையாட இருக்கிறது.
கேன் வில்லியம்சன் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றாலும், சிறப்பாகவே செயல்பட்டது. கடந்த 2021 ம் ஆண்டு நடந்த இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வென்றது. அதேபோல், கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு சென்று இரண்டாம் இடம் பிடித்தது.
மார்டின் கப்தில் எங்கே..?
ஒரு காலத்தில் நியூசிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய தொடக்க வீரராக இருந்தவர் மார்டின் கப்தில். கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மார்டின் கப்டில் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். தற்போது, அவர் அணியில் எங்கே என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் கப்தில் பி.எஸ்.எல்லில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேன் வில்லியம்சன் இல்லாத பட்சத்தில் மார்டின் கப்திலின் அனுபவம் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு சிறப்பாக செயல்பட வாய்ப்பு அளிக்கும்.