IND vs PAK: "நம்பர் 1 வீரர்தான்! ஆனால்" சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கிற்காக காத்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
IND vs PAK T20 World Cup: நம்பர் ஒன் வீரராக இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவிக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெறுகிறது. சமீபகாலமாக இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளும் இதுபோன்று ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்பு அதிகரிக்கிறது.
இது சூர்யகுமார் யாதவிற்கான தருணம்:
இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கிற்கு சவால் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,
விராட் கோலி எப்போதுமே டாப் பேட்ஸ்மேன். அவருக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை சிறப்பாக ஆடவில்லை. ரோகித் சர்மா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.சி.சி. தொடர்களில் ரன்களை குவித்து தன்னை நிரூபித்துள்ளார். இது சூர்யகுமார் யாதவிற்கான தருணம்.
அவர் நம்பர் ஒன் வீரர். இதனால், அவர் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ரன்களை குவிக்க வேண்டும். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக எப்போது எல்லாம் பேட்டிங் செய்ய வந்துள்ளாரோ அப்போது எல்லாம் பெரியளவு ரன்களை குவிக்கவில்லை. ஆனால், அவர் மற்ற அணிகளுக்கு எதிராக அதிக ரன்களை குவித்துள்ளார். அவர் 360 டிகிரியில் ஆடும் ப்ளேயர். அவர் விளையாடுவதை பார்ப்பதே ஒரு விருந்து. அவர் மிகக்குறுகிய காலத்தில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சூர்யகுமார் இதுவரை எப்படி?
டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரரான சூர்யகுமார் யாதவ் இதுவரை 61 டி20 போட்டிகளில் ஆடி 17 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 143 ரன்களை குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக திகழும் சூர்யகுமார் யாதவ் இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தை மாற்றும் அளவிற்கான இன்னிங்சை ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 15 ரன்னில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.