Jasprit Bumrah: பும்ரா நீங்களுமா? டெஸ்ட் கிரிக்கெட், முக்கிய முடிவை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் - யார் தான் இருக்கா?
Jasprit Bumrah: டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, மிக முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jasprit Bumrah: ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததன் விளைவாக இந்திய டெஸ்ட் அணிக்கான, புதிய கேப்டனை பிசிசிஐ தேடி வருகிறது.
பும்ரா எடுத்த முக்கிய முடிவு:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனுக்கான தேர்வில் தனது பெயர் இடம்பெற வேண்டாம் என, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அண்மையில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா வகித்து வந்த பதவிக்கு, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த பதவிக்கு பும்ரா சரியான தேர்வாக இருப்பார் என கருதப்பட்டாலும், பணிச்சுமை காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகளிலும் தன்னால் விளையாட முடியாது என்பதை உணர்ந்து, பும்ரா தனது முடிவினை தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் முழுவதும் விளையாடக்கூடிய ஒருவரையே கேப்டனாக தேர்வுக்குழு விரும்புவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தகக்து.
புதிய கேப்டன் யார்?
பும்ரா போட்டியிலிருந்து விலகியதால், கில் மற்றும் பண்ட் இடையே தேர்வுக்குழுவினர் தங்களது முழு கவனத்தையும் செலுத்த உள்ளனர். இவர்களில் ஒருவர் கேப்டனாகவும் மற்றொருவர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படுவது உறுதி என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கேப்டன் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய வீரர்களின் விவரங்கள், வரும் 24ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியா இங்கிலாந்து இடையேயான தொடர், ஜூன் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.
அணியில் கோலி இருப்பாரா?
ரோகித் சர்மாவின் ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே, பிசிசிஐ போராடி வருகிறது. இந்நிலையில், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகள் வரும் ஜுன் மாதம் தொடங்குவதற்கு முன்பே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக விரும்புவதாக கடந்த ஏப்ரல் மாதமே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் விராட் கோலி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ அறிவிப்பு எதையும் வெளியிடாவிட்டாலும், தகவல்களையும் அவர்கள் மறுக்கவில்லை.
இருப்பினும், இங்கிலாந்து தொடரில் கோலியின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என, பிசிசிஐ விரும்புகிறதாம். இதனால், அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாம். இதுதொடர்பாக அஜித் அகர்கர் தலைமையிலான குழு மீண்டும் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாம். அதேநேரம், இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் மற்றும் ஐபிஎல் ஒத்திவைப்பு போன்ற பரப்பான சூழல் நிலவுவதால், இந்த வார இறுதியில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என கூறப்படுகிறது.




















