தோனியின் நம்பிக்கைக்குரிய வீரராக இருந்தது மகிழ்ச்சியான தருணம்..! "தல"யின் தளபதி கோலி நெகிழ்ச்சி..!
"இந்த மனிதரின் நம்பகத்திற்குரிய துணையாக இருந்தது என் வாழ்வில் நான் விரும்பிய, எனக்கு மிகவும் பிடித்த தருணமாக இருந்தது " என்று கோலி தோனிக்கு புகழாரம் சூடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் விராட்கோலி. அவரது பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட விராட்கோலி இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறார்.
விராட் கோலி 100வது போட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து ஏறக்குறைய 3 வருடங்களாகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்திய தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் 27-ம் தேதி அதாவது நாளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ள உள்ளார். விராட் கோலிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமான ஒன்று, ஏனென்றால் நீண்ட ஓய்வில் இருந்த அவர் ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்தியா தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது மட்டுமின்றி விராட் கோலிக்கு அது 100வது டி20 போட்டியாக அமைய உள்ளது.
மூன்று வடிவத்திலும் 100 போட்டிகள்
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற இருக்கிறார். இந்த தருணத்தில் தனது ஃபார்மை திரும்ப கொண்டு வருவது அவருக்கும் இந்திய அணிக்கும் நல்லதாக அமையும். முன்னாள் கேப்டன் தோனி கொடுத்த நம்பிக்கையை மிகவும் விரும்பியதாக அவர் சமீபத்திய டீவீட்டில் தெரிவித்து உள்ளார்.
விராட் ட்வீட்
அவருடைய டீவீட்டில், "இந்த மனிதரின் நம்பகத்திற்குரிய துணையாக இருந்தது என் வாழ்வில் நான் விரும்பிய, எனக்கு மிகவும் பிடித்த தருணமாக இருந்தது. எங்கள் பார்ட்னர்ஷிப்கள் எப்போதும் சிறந்ததாக இருந்தது", என்று எழுதி அருகில் '7+18' என்று எழுதி ஹார்ட் எமோஜி பதிவிட்டிருந்தார். 7 என்பது தோனியின் ஜெர்சி எண், 18 என்பது விராட் கோலியின் ஜெர்சி எண் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் தோணியும் இணைந்து விளையாடிய காலங்களில் பல அசாத்திய வெற்றிகளை நிகழ்த்தி காட்டி உள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது.
Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 ❤️ pic.twitter.com/PafGRkMH0Y
— Virat Kohli (@imVkohli) August 25, 2022
ஃபார்முக்கு திரும்புவாரா கோலி
அதுமட்டுமின்றி தோனியின் கேப்டன்சியில் கோலி அசுரத்தனமான ஃபார்மில் இருந்ததும் நமக்கு தெரியும். சமீபகாலமாக பார்மில் இல்லாத கோலி ஆசிய கோப்பை மூலம் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம். பயிற்சி முகாமில் விராட் கோலி காட்டிய அதிரடியால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலமாக விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறி வந்தார், அதனால் வலைபயிற்சியில் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களான அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோரின் பவுலிங்கை எதிர்கொண்டு ப்ராக்டிஸ் செய்தாய். அவர்களது பந்துகளை பொளந்துக்கட்டி சிக்ஸருக்கு அனுப்பிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்