India vs England 2nd Test: சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்...மோசமான ரெக்கார்டை செய்த இந்திய அணி!
India vs England 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியை 28 ரன்கள் வித்தியாசத்தில் விட்டுக்கொடுத்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதன்படி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்.
இதில் 41 பந்துகள் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ஓரளவிற்கு ரன்களை சேர்த்தார். அதன்படி, 46 பந்துகள் களத்தில் நின்ற அவர் 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். அப்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்தது. இதனிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
அவருடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். அதன்படி, இங்கிலாந்து அணி வீரர் ஹார்ட்லி வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டு 151 பந்துகளில் சதம் விளாசினார் ஜெய்ஸ்வால்.இதனிடயே, 59 பந்துகள் களத்தில் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ரஜத் படிதர் 32 ரன்களிலும், அக்சர் படேல் 27 மற்றும் சிகர் பரத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
இந்த நிலையில், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சரியாக 25 ரன்கள் முதல் 35 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில் எந்த ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் இப்படி விசித்திரமான முறையில் சராசரி ரன்களை எடுத்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் மட்டுமே நல்ல முறையில் விளையாடி இருக்கிறார் அவரும் மற்ற வீரர்களைப்போல் விக்கெட்டை பறிகொடுத்திருந்தால் ஆட்டம் மோசமான நிலைக்கு சென்றிருக்கும் என்பது போல் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இச்சூழலில் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே நாளில் 179 ரன்கள்...கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்!
மேலும் படிக்க: Watch Video: ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 5-வது முறையாக அவுட் ஆன சுப்மன் கில்! சச்சினை ஒப்பிட்டு கிண்டல் செய்யும் ரசிகர்கள்!