IND vs SA, 5th T20 : இந்தியா - தெ.ஆ. இறுதிப்போட்டியில் மழை விளையாடியதால் ஆட்டம் ரத்து..! சமனில் முடிந்த தொடர்..!
IND vs SA, 5th T20 : இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
டாஸ் வென்ற கேசவ் மகாராஜா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, இந்தியா பேட்டிங்கை தொடங்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களிடம் வருணபகவான் விளையாடினார். இதனால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 7.50க்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, மழை விட்டபிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர்.
தொடக்க வீரர்களாக இஷான்கிஷான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்தை தொடங்கினர். இந்த தொடர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இஷான்கிஷான் இந்த போட்டியிலும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
ஆனால், 7 பந்துகளில் 2 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்தநிலையில் லுங்கிநிகிடி பந்தில் போல்டானார். மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் 12 பந்தில் 10 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகினார். இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. அப்போது ஸ்ரேயாஸ் ரன் ஏதுமின்றியும், கேப்டன் ரிஷப்பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனால், ஆட்டம் மீண்டும் தடைபட்டது.
🚨 Update 🚨
— BCCI (@BCCI) June 19, 2022
Play has heen officially called off.
The fifth & final @Paytm #INDvSA T20I has been abandoned due to rain. #TeamIndia pic.twitter.com/tQWmfaK3SV
சிறிது நேரம் கழித்து மழை நின்றது. ஆனாலும், அவுட்பீல்டு ஈரப்பதத்துடனே இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் எப்போது ஆட்டம் தொடங்கும் என்று காத்திருந்தனர். ஆனால், ஈரப்பதம் காய்ந்து இந்திய அணி ஆடுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களிடம் மீண்டும் வருணபகவானே ஆடினார்.
மீண்டும் மழை தொடங்கியதால் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் விரக்தியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி நடுவர்கள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால், எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரின் நாயகனாக புவனேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்