India vs Nepal: சிக்ஸர் மழை பொழிந்த ரோகித் - கில்; 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம்..!
India vs Nepal: அதிரடியாக ஆடி வந்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை பொழிய ஆரம்பித்துவிட்டார். ரோகித் முதலில் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து கில்லும் அரைசதம் அடிக்க, இந்திய அணி இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான குழு அளவிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகேலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். இதன்படி களமிறங்கிய நேபாளம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் சேர்த்தது. நேபாளம் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் ஆஷிஃப் ஷேக் 97 பந்தினை எதிர்கொண்டு 58 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல் இந்திய அணி தரப்பில், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2.1 ஓவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் பின்னர் நீண்ட நேரம் பெய்த மழையால் போட்டி மேற்கொண்டு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்பட்டது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் போட்டி முழுவதுமாக தடைபட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் நிலையில் இருந்தது.
மழை நின்ற பின்னர் மைதானத்தின் வெளிப்புற ஆடுகளத்தில் நீர் தேங்கியதால் போட்டியை உடனே துவங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மழை நின்ற பின்னர் போட்டி 10.15 மணிக்கு துவங்கப்பட்டது. அப்போது இந்திய அணி வெற்றி பெற 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. அதன் பின்னர் அடித்து ஆட வெற்றி இலக்கை நோக்கி கிடுகிடுவென முன்னேறியது. அதிரடியாக ஆடி வந்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை பொழிய ஆரம்பித்துவிட்டார். ரோகித் முதலில் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து கில்லும் அரைசதம் அடிக்க, இந்திய அணி இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது.
இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் விக்கெட் எதையும் இழக்காமல் 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 59 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 74 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல் சுப்மன் கில் 62 பந்துகளில் 8பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு 67 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.