Varun Chakravarthy:மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் இடம் - வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி
இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கம்பேக் கொடுத்தது பற்றி வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.

இந்தியா - வங்கதேசம்:
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று முன் தினம் (அக்டோபர் 6) நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது.
மூன்று ஆண்டுகளுக்கு பின்:
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பினார் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. குவாலியரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கம்பேக் கொடுத்தது பற்றி வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ளது கண்டிப்பாக எனக்கு உணர்வுபூர்வமானது. நீல நிற ஆடையில் மீண்டும் விளையாட வந்துள்ளது மறுபிறப்பை போல உணர்கிறேன். எப்போதும் செயல்முறைகளை பின்பற்ற விரும்புகிறேன். அதைத்தான் ஐபிஎல் தொடரில் பின்பற்றினேன். அதிகம் முன்னோக்கி செல்லாமல் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறேன். அதனாலேயே நான் அதிகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அல்லது சிந்திக்காமல் இருக்கிறேன். ஐபிஎல் முடிந்த பின் டிஎன்பிஎல் போன்ற தரமான தொடரில் விளையாடினேன்.
அங்கே தான் நான் அஸ்வின் பாயுடன் சேர்ந்து நிறைய வேலைகள் செய்தேன். அவருடன் சேர்ந்து நாங்கள் கோப்பையை வென்றோம். அது இங்கே வருவதற்கு எனக்குப் பெரிய தன்னம்பிக்கையின் கொடுத்தது. முதல் ஓவரிலேயே கேட்ச் விடாமல் இருந்திருந்தால் எனக்கு விக்கெட் கிடைத்திருக்கலாம். இருப்பினும் கிரிக்கெட் அப்படிதான் செல்லும். அதை புகார் சொல்ல முடியாது கடவுளுக்கு நன்றி. இங்கே நிறைய சவால் இருக்கும். இந்திய அணிக்குள் வந்ததுமே உங்களை பலரும் எளிதாக முடிந்து விட்டதாக எழுதுவார்கள். தொடர்ந்து போராடி கதவை தட்ட வேண்டும். இம்முறை அது நடந்தது. அதில் தொடர்ந்து நல்ல வேலை செய்வேன் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார் வருண் சக்கரவர்த்தி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

