IND vs AUS Final 2023: எங்களுக்கு இவர பார்க்கும்போதுதான் பயமா இருக்கு.. பேட் கம்மின்ஸ் சொன்ன அந்த வீரர் யார்?
India vs Australia World Cup Final 2023: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ஷமி 6 இன்னிங்ஸ்களில் 23 விக்கெட்டுகளுடன் விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கம்மின்ஸ் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியா ஒரு நல்ல வலிமையான அணி. முகமது ஷமி ஒரு பெரிய (அச்சுறுத்தல்)" என்று கம்மின்ஸ் கூறினார். ஒரு லட்சத்து 25ஆயிரம் பார்வையாளர்கள் கொண்ட மைதானத்தில் ரசிகர்கள் குறித்த கேள்விக்கு, கம்மின்ஸ் அளித்த பதில், ரசிகர்களின் ஆதரவு ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் ஒரு பெரிய கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமாக எதுவும் இருக்க முடியாது.
இது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம். கூட்டம் மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கும். ஆனால், விளையாட்டில் ஒரு பெரிய கூட்டம் அமைதியாக இருப்பதைக் கேட்பதை விட வேறு எதுவும் இல்லை, அதுவே நாளைய இலக்கு என கம்மின்ஸ் பதில் அளித்தார்.
ஆடுகளத்தைப் பற்றி பேசுகையில், "இது வெளிப்படையாக இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். உங்கள் சொந்த நாட்டில் உங்கள் சொந்த விக்கெட்டில் விளையாடுவதில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் நாங்கள் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளோம். ஆஸ்திரேலியா அணி ஒரு அணியாக இந்தியாவில் பல தொடர்களை விளையாடி உள்ளது. அதேபோல் வீரர்களாக பிரிந்து ஐபிஎல் போட்டிகளிலும் வீரர்கள் விளையாடி உள்ளதால் இது அனைத்தும் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக இருக்கும்.
"நாங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடியுள்ளோம், எனவே இந்திய அணிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு புதிதல்ல. டேவிட் வார்னரைப் போன்ற ஒருவர் நடனமாடுவதற்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். இது இரு அணிகளுக்கும் ஒரு சமமான போட்டி. 2015 இல் ஆஸ்திரேலியா அணி கோப்பையைக் கைப்பற்றியபோது இருந்த வீரர்களில் 6-7 பேர் தற்போதும் அணியில் உள்ளனர். இது எங்களுக்கு ஒரு அணியாக நம்பிக்கை அளிக்கின்றது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என மூன்று பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆனார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படியான ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பேட் கம்மின்ஸின் இந்த் கருத்து இந்திய ரசிகர்கள் பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது என்றே கூறலாம். மொத்தத்தில் இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதுடன் அதிகப்படியான பரபரப்பை உண்டு பண்ணக்கூடிய போட்டியாகவும் இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் இந்தியாவுன் ஆஸ்திரேலியாவும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. அப்போதைய கேப்டன் ரிக்கி பாண்டின் அந்த போட்டியில் 140 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன் பின்னர் இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது மூன்றாவது உலகக் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா அணி இதுவரை 8முறை (2023 உட்பட) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 1987, 1999, 2003, 2007, 20015 கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.