(Source: ECI | ABP NEWS)
IND vs ENG: இடியாய் இடிக்குமா? இடிந்து போய் உட்காருமா? இந்திய பேட்டிங்கிற்கு காத்திருக்கு சவால்!
இங்கிலாந்து நாட்டில் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இளம் பேட்ஸ்மேன்களை கொண்ட இந்திய பேட்டிங் எப்படி சமாளிக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகிய சகாப்தங்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ள நிலையில் முற்றிலும் இளம் ரத்தத்துடன் இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
புத்தம் புது இந்திய அணி:
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர்கள் கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் ரெட்டி, துருவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் இங்கிலாந்து பயணிக்கிறது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, முகமது சிராஜ் மிகப்பெரிய பலமாக உள்ளனர். இவர்களுடன் ஷர்துல் தாக்கூர், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப்சிங் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சுழல் கூட்டணியாக களமிறங்கியுள்ளனர்.
தாங்குமா இளம் படை?
இந்த தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இங்கிலாந்தின் வேகத்தையும், சுழலையும் அதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தாக்குப்பிடிக்குமா? என்ற கேள்வியை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், இந்தியாவின் பேட்டிங்கில் சுப்மன்கில், ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர். நிதிஷ் ரெட்டி, துருவ் ஜோரல் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஆல்ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா உள்ளனர்.
இந்த பேட்டிங் ஆர்டரில் சுப்மன்கில், ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோருக்கு மட்டுமே நீண்ட பேட்டிங் அனுபவம் உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரை கடந்த பல ஆண்டுகளாக தாங்கிப் பிடித்த விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரில் ஒருவர் கூட இல்லாமல் இந்திய அணி இந்த முறை இங்கிலாந்திற்குச் செல்கிறது.
மிடில் ஆர்டர் சவால்:
ஆண்டர்சன், பிராட் ஆகிய இரண்டு ஜாம்பவான்களும் இங்கிலாந்து அணியில் ஆடாவிட்டாலும் மற்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவால் தருவார்கள். இவர்களை எப்படி இளம் வீரர்களான சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, துருவ் ஜோரல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இங்கிலாந்து அணியை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.
வெளிநாட்டு தொடரில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் இந்திய வீரருக்கு பிரகாசமான எதிர்காலம் இந்திய அணியில் உள்ளது. சச்சின், டிராவிட், லட்சுமணன், கோலி, ரஹானே, புஜாரா போன்றோர் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடியே இந்திய அணியின் நட்சத்திரங்களாக உருவெடுத்தனர். அப்படி ஒரு பொன்னான வாய்ப்பு இந்த இளம் வீரர்களுக்கு கிடைத்துள்ளது.
பல கேள்விகள்:
மொத்தம் உள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஜொலித்தால் இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட கால இடத்தை தக்கவைக்கலாம். விராட் கோலி இல்லாத சூழலில் அவரது 4வது இடத்தில் சுப்மன்கில் ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்குவாரா? அல்லது சாய் சுதர்சன் தொடங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரியாக கட்டமைத்து, அவர்கள் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணி இங்கிலாந்திற்கு சவால் அளிக்க முடியும்.



















