Sunil Gavaskar: 'அரசியலால் அழிகிறது இந்திய கிரிக்கெட் அணி’.. பகிரங்கமாக கருத்தை தெரிவித்தாரா கவாஸ்கர்? உண்மை என்ன?
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணி குறித்தும், பிசிசிஐ குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்ததாக செய்திகள் பரவியது. அது இணையத்தில் வைரலானது.
ஆசியக் கோப்பையில் இந்தியா கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் முதன்மையான பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் சொதப்பினர். இந்திய அணியின் தூண்களாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விரைவாக அவுட்டானதால், இந்திய அணி தோல்வியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டது.
இந்த போட்டிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணி குறித்தும், பிசிசிஐ குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்ததாக செய்திகள் பரவியது. அது இணையத்தில் வைரலானது. அதில், “இந்திய கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியலே காரணம். அழகான கிரிக்கெட் விளையாட்டை அரசியலால் பாழாக்கியது இந்தியர்களுக்கு மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம். பிசிசிஐக்குள் அரசியல் புகுந்து ஆட்டி படைக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முடிவுகள் இதற்கு சான்றாகும்.” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வைரலான பிறகு, பல பயனர்கள் சுனில் கவாஸ்கர் இதை உண்மையில் சொன்னாரா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். இந்நிலையில் தற்போது இந்த வைரலான செய்தியின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுனில் கவாஸ்கரின் மகனும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ரோஹன் கவாஸ்கர் இந்த கருத்து போலியானது என தெரிவித்துள்ளார்.
This is a completely fabricated statement attributed to my father . He hasn’t made this statement and someone is just trying to create mischief . It’s absolutely ridiculous that people would use his name to get more engagement . Please retweet so that the truth prevails https://t.co/UNLOk5GVXr
— Rohan Gavaskar (@rohangava9) September 3, 2023
இதுகுறித்து ரோஹன் கவாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது எனது தந்தையின் பெயரில் பரப்பப்படும் தவறான செய்தி. என் தந்தை அப்படி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த தவறாக செய்தியை யாரோ பரப்ப முயற்சிக்கின்றனர். மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக மற்றவர்களின் பெயரில் பொய்களை பரப்புவது மிகவும் மோசமானது. இந்த ட்வீட்டை மறு ட்வீட் செய்வதன் மூலம் உண்மையை வெளியே கொண்டு வர உதவுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை சுனில் கவாஸ்கரின் பெயரைப் பயன்படுத்தி போலியான அறிக்கையை பரப்பியதாக ரோகன் கவாஸ்கர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், இந்த பொய்யான செய்தி குறித்து சுனில் கவாஸ்கர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆசியக் கோப்பை புள்ளி பட்டியலில் யார் முதலிடம்..?
ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 30 முதல் தொடங்கியது. இப்போட்டியில் இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதுவரை பாகிஸ்தான் அணி மட்டுமே சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. குரூப்-ஏ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சூப்பர்-4க்கு தகுதி பெற நேபாளத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும். அதேநேரம் குரூப்-பியில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் விளையாடி அதில் அணி ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியுற்றது. இதன் மூலம் ஏ பிரிவில் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது, அதுவும் முடிவில்லாமல் போனது. இந்திய அணி இன்று நேபாளத்திற்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர்-4 க்கு தகுதி பெறும்.
அதேசமயம், ஏ பிரிவில் மூன்றாவது அணியான நேபாளம் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேபாளம் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி, அதில் தோல்வியடைந்துள்ளது. இது தவிர, வங்கதேச அணி 2-ல் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று குரூப் பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் 1 போட்டியில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான், குரூப்-பியில் தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.