IND W Vs PAK W: 12-0, பாகிஸ்தனை பந்தாடிய இந்திய மகளிர் அணி - டாப் ப்ளேஸை பிடித்த ஹர்மன் டீம், 2 முறை ஆல்-அவுட்
IND W Vs PAK W ICC World Cup 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

IND W Vs PAK W ICC World Cup 2025: இந்திய அணியுடனான 12வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக தோல்வியை கண்டுள்ளது.
248 ரன்களை டார்கெட்டாக வைத்த இந்தியா:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தில் மகளிர் உலகக் கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் நேற்றைய போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான ப்ரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சற்றே வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இதையடுத்து வந்த ஹர்லீன் தியோல்,கேப்டன் ஹர்மன்ப்ரீத், தீப்தி சர்மா ஆகியோரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். ஆனால், யாரும் நிலைத்து நின்று பெரிய அதிகப்படியான ரன்களை சேர்க்கவில்லை. இறுதியில் சற்றே அதிரடி காட்டிய ரிச்சா கோஷ், 20 பந்துகளில் 35 ரன்களை சேர்த்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்து ஆல்-அவுட்டானது.
மீண்டும் ஆல்-அவுட்டான பாகிஸ்தான்:
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், முனீபா அலி, சதஃப் ஷாம்ஸ் மற்றும் அலியா ரியாஸ் ஆகிய முன்கள வீராங்கனைகள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 26 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேநேரம், மற்றொரு தொடக்க வீராங்கனையான சித்ரா அமீன் மற்றும் நிலைத்து நின்று ஆடி 81 ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆனால், நடாலியா பெர்வைஸ் எனும் மற்றொரு வீராங்கனையை தவிர மற்றவர்கள் அனைவருமே, பேட்டிங்கில் சொதப்ப, 43 ஓவர்களிலேயே, வெறும் 159 ரன்களை மட்டுமே சேர்த்து பாகிஸ்தான் அணி ஆல்-அவுட்டானது. கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களுக்கு விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி சொற்ப ரன்களுக்கு ஆல்-அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்று,விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
12-0 என அசத்தும் இந்தியா:
ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகள் என்றாலே, இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு அணிகளுமே அட்டகாசமான வரலாற்றை கொண்டுள்ளன. அந்த வகையில், ஏற்கனவே சர்வதே மகளிர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட 11 முறையும் பாகிஸ்தான் அணி தோல்வியே கண்டுள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் அணிக்கு நேற்றைய போட்டி 12வது தோல்வியாக அமைந்துள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு வித்திட்ட க்ரந்தி கவுட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்:
இதனிடையே, நேற்றைய வெற்றியை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்திய அணி, 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒரு வெற்றி மற்றும் ஒரு ட்ராவை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. தலா இரண்டு புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள், இதுவரையிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் கடைசி நான்கு இடங்களில் உள்ளன.




















