IND vs ZIM: ஐ.பி.எல். மனநிலையில் பேட்டிங் செய்யலாமா? இந்தியாவிற்கு பாடம் எடுத்த ஜிம்பாப்வே!
ஐ.பி.எல். தொடர் மனநிலையில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி வீரர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் பாடம் நடத்தியுள்ளனர்.
டி20 உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி வீரர்களும், இந்திய அணி ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில், டி20 உலக சாம்பியனுக்கு நேற்று ஜிம்பாப்வே அணி பாடம் புகட்டியுள்ளது. ஏனென்றால், ஹராரேவில் நேற்று நடந்த போட்டியில் அலட்சியமாக ஆடிய இந்திய அணிக்கு மிக அழகாக பாடம் எடுத்துள்ளனர் ஜிம்பாப்வே அணி.
ஜிம்பாப்வேயில் இந்தியா:
சுப்மன் கில் தலைமையில் முற்றிலும் இளம் படையாக ஜிம்பாப்வேக்கு டி20 தொடரில் களமிறங்கியது இந்திய அணி. ஐ.பி.எல். தொடரில் அசத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், முகேஷ்குமார் உள்ளிட்டவர்களுடன் ஐ.பி.எல். நட்சத்திர வீரர்களான ருதுராஜ், ரிங்குசிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் ஆகியோருடனும் இந்திய அணி களமிறங்கியது.
சிக்கந்தர் ராசா தலைமையில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி சிறிய அணி என்றாலும், அவர்கள் சொந்த மண்ணில் களமிறங்கியதே அவர்களுக்கு பலமாகும். அந்த அணியின் மாதவரே, ப்ரையன் பென்னட், மையர்ஸ், மாடேந்தே தவிர பிற வீரர்கள் சொதப்பினர். இதனால், இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஐ.பி.எல். மனநிலையில் பேட்டிங்:
இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் அசுரத்தனமாக பேட்டிங் செய்யும் பேட்டிங் பட்டாளத்தை கொண்ட இந்திய அணி மிக எளிதாக இந்த போட்டியை வென்று விடும் என்று கருதிய ரசிகர்களுக்கு ஜிம்பாப்வே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தது. சன்ரைசர்ஸ் அணிக்காக அசத்திய அபிஷேக் சர்மா இந்திய அணிக்கான தனது முதல் போட்டியான நேற்று டக் அவுட்டாகி சொதப்பினார்.
அவருக்கு அடுத்து வந்த சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களுக்கும், ராஜஸ்தான் அணிக்காக அசத்தல் பேட்டிங் செய்த ரியான் பராக் 2 ரன்னிலும், சிக்ஸர் மன்னன் ரிங்குசிங் டக் அவுட்டாகியும் ஏமாற்றம் தந்தனர். அனுபவ வீரர் சுப்மன்கில் மட்டும் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்களில் பெரும்பாலோனார் ஐ.பி.எல். மன நிலையிலே பேட்டிங் செய்ததே அவர்கள் ஆட்டமிழந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பாடம் கற்றுத்தந்த சிக்கந்தர் ராசா படை:
உள்ளூர் வீரர்கள், வெளியூர் வீரர்களுடன் கலந்து ஆடும் ஐ.பி.எல். தொடரில் பெரும்பாலும் விதிகள், மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. ஆனால், சர்வதேச டி20 போட்டியில் அதுபோன்று இருக்கும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறானது ஆகும். இலக்கு குறைவு, ஜிம்பாப்வே என்ற சிறிய அணி என்ற அலட்சிய மனப்போக்கும், அதிரடியாகவே ஆட வேண்டும் என்ற எண்ணமுமே இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை விரைவாக இழந்துவிட்டனர்.
ஜிம்பாப்வே சென்ற இந்திய அணியில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்குசிங், துருவ் ஜோரல் ஆகியோர் இந்திய அணிக்கு ஏற்கனவே ஆடிய அனுபவம் கொண்டவர்கள். சுப்மன்கில் தவிர மற்றவர்கள் பொறுப்பற்ற முறையில் பேட்டிங் செய்தனர். சர்வதேச டி20 ஆட்டங்களைப் பொறுத்தவரை, ஐ.பி.எல். மனநிலையில் இருந்து வெளியில் வந்து ஆடினால் மட்டுமே சோபிக்க முடியும் என்பதற்கு நேற்றைய போட்டி இந்திய வீரர்களுக்கு தக்க பாடம் ஆகும். இவை மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி சிறப்பாக பந்துவீசியதே அவர்களின் வெற்றிக்கு பிரதான காரணம் ஆகும். சதாராவும், கேப்டன் சிக்கந்தர் ராசாவும் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஜிம்பாப்வே வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.