IND vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சுழலும் பந்து, நெருப்பை உமிழும் பேட்... இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின்!
இந்த தொடரை பொறுத்தவரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொல்லையாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை நாளை (ஜூலை 12) முதல் விளையாட இருக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடக்கிறது.
இந்த தொடரை பொறுத்தவரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொல்லையாக இருப்பார் என்று கருதப்படுகிறது. அதற்கு காரணம் இதுவரை அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சம்பவங்கள்தான். பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அஸ்வின்:
ரவிசந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை 5 சதங்களை அடித்துள்ளார். அதில், 4 சதங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டவை. அஸ்வின் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் (21 இன்னிங்ஸ்கள்) பந்துவீசி 21.85 என்ற சராசரியுடன் 60 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில், 4 முறை 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 7 - 83 ஆகும்.
அதேபோல், 11 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பேட்டிங் செய்துள்ள அஸ்வின், 50.18 சராசரியில் 552 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 124. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அஸ்வின் இதுவரை ஒருமுறை மட்டுமே டக் அவுட்டாகியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம் பெறாத அஸ்வின்:
ரவிசந்திரன் அஸ்வின் கடைசியாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட்டில் விளையாடினார். கடைசியாக ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. அது இன்றுவரை சர்ச்சையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
கடந்த 2010 ம் ஆண்டு ஜூன் மாதம் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை இவர் 92 டெஸ்ட், 113 ஒருநாள் மற்றும் 65 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்படி டெஸ்டில் 474 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கை பொறுத்தவரை டெஸ்டில் 3129 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 184 ரன்களும் எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.