IND vs WI: கேம்ப்பெல் - ஹோப் செஞ்சுரி.. ஆனாலும் வெஸ்ட் இண்டீசுக்கு இஞ்சுரி - தோல்வியில் இருந்து தப்புமா?
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேம்ப்பெல் - ஷாய் ஹோப் சதம் விளாச இன்னிங்ஸ் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியைத் தவிர்த்தது.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் விறுவிறுப்பாக ஆடி வருகின்றனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சொதப்பிய டாப் ஆர்டர்:
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. 270 ரன்களை எடுத்தால் மட்டுமே இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியும் என்ற நெருக்கடியான சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று ஆட்டத்தை தொடங்கியது.

இந்த தொடரில் சொதப்பி வரும் சந்தர்பாலின் மகன் தகேநரென் 10 ரன்களில் அவுட்டாக, அதானாசே 7 ரன்னில் அவுட்டாக 35 ரன்களில் கேம்ப்பெல் - ஷாய் ஹோப் இருவரும் நிதானமாக ஆடினர். முதல் இன்னிங்சில் சுழல் தாக்குதல் வேக தாக்குதல் நடத்திய இந்தியா இரண்டாது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று நினைத்தனர்.
கேம்ப்பெல் சதம்:
ஆனால், கேம்ப்பெல் - ஷாய் ஹோப் ஜோடி அபாரமாக ஆடியது. மிகவும் நிதானமாக, பொறுப்புடன் ஆடினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் மெல்ல மெல்ல ஏறியது. பொறுப்புடன் ஆடிய கேம்ப்பெல் அரைசதம் விளாசினார். முதல் இன்னிங்சில் சுழலில் அசத்திய சுந்தர், குல்தீப் யாதவ், ஜடேஜா பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர்.
சிறப்பாக ஆடிய கேம்ப்பெல் சதம் விளாசினார். சதம் விளாசிய கேம்பெல் ஜடேஜா சுழலில் அவுட்டானார். அவர் 199 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்ஸருடன் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு ஷாய் ஹோப்புடன் கேப்டன் சேஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக இணைந்து பொறுப்புடன் ஆடினர்.
ஷாய் ஹோப்:
சேஸ் நிதானமாக ஆட ஷாய் ஹோப் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் சதம் விளாசவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது. அபாரமாக ஆடிய ஷாய் ஹோப் முகமது சிராஜ் பந்தில் போல்டானார். அவர் 214 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தற்போது கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. ஆட்டம் முடிய இன்னும் ஒன்றரை நாட்கள் உள்ள நிலையில், இந்திய அணிக்கு வலுவான இலக்கை நிர்ணயிப்பது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலான ஒன்றாக உள்ளது.
டிரா செய்யுமா வெஸ்ட் இண்டீஸ்?
இன்னும் தோல்வியின் பிடியில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெயிலண்டர்கள் பொறுப்புடன் ஆடினால் ஆட்டத்தை டிரா செய்யலாம். ஆனாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் எஞ்சிய விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை எளிதாக்கவே முயற்சிப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது தெவின் இம்லாச் - சேஸ் ஆடி வருகின்றனர். டெயிலண்டர்கள் ஜஸ்டின் கீரிவ்ஸ், வாரிகன், பியர்ரே, பிலிப், சீல்ஸ் உள்ளனர்.




















