IND vs WI Head to Head: கரிபீயன் ராஜாக்களுக்கு எதிராக இந்திய சிங்கங்கள்..! டெஸ்ட் வரலாற்றில் இதுவரை நடந்தது என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக 2002ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் டோமினிகாவில் நடைபெற உள்ளது.
இந்திய அணி – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதன்முறையாக 1948ம் ஆண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த போட்டிக்கு பிறகு இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும், இந்தியா 22 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
பிரையன் லாரா, சந்தர்பால், சர்வான் போன்ற ஜாம்பவான்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து விடைபெற்ற பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் மோசமான நிலையிலே உள்ளது. குறிப்பாக, 2002ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது மிகவும் சோகமான செய்தியாக அந்த நாட்டு ரசிகர்களுக்கு உள்ளது.
அதிகபட்ச ரன்: (அணியாக)
இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தன்வசம் வைத்துள்ளது. 2018ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்களை எடுத்திருந்தது. அந்த போட்டியில் பிரித்விஷா, விராட் கோலி மற்றும் ஜடேஜா சதம் விளாசியிருந்தனர். அந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் குவித்துள்ளனர்.
குறைந்த ரன்கள்: (அணியாக)
இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் என்ற மோசமான சாதனையும் இந்திய அணியின் வசமே உள்ளது. 1987ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 75 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுருண்டது. அந்த போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா அபாரமாக ஆடினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
தனிநபர் அதிக ரன்கள்:
இரு அணிகளுக்கும் இடையேயான மோதலில் தனிநபர் அதிகபட்சமாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 749 ரன்களை எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே அவரது அதிகபட்ச ரன்னான 236 ரன்களை எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் விளாசிய வீரராக கிளைவ் லாயிட் உள்ளார். அவர் 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 344 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரராக முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளார். அவர் 25 டெஸ்ட் போட்டிகள் அவர்களுக்கு எதிராக ஆடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 முறை 4 விக்கெட்டுகளும், 4 அரைசதங்களும் விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரராக மால்கோம் மார்ஷ் உள்ளார். அவர் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தனிநபர் அதிகபட்சம் ( ஒரு இன்னிங்ஸ்):
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஒரு இன்னிங்சில் தனிநபர் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோகன் கன்காய் உள்ளார். அவர் 1958ம் ஆண்டு இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கொல்கத்தா மைதானத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஒன் –டவுன் வீரராக களமிறங்கினார். அந்த போட்டியில் அவர் 256 ரன்கள் விளாசி அசத்தினார். அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறந்த பந்துவீச்சு:
இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் தனிநபர் சிறந்த பந்துவீச்சை கபில்தேவ் தன்வசம் வைத்துள்ளார். அவர் 1983ம் ஆண்டு இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 83 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுவே ஒரு இன்னிங்சில் தனிநபரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். ஆனாலும், அந்த போட்டியில் இந்தியா 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஒரு போட்டியாக பொறுத்தவரையில் நரேந்திர ஹிர்வானி சிறந்த பந்துவீச்சை தன்வசம் வைத்துள்ளார். அவர் 1988ம் ஆண்டு நடந்த போட்டியில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சிறந்த பார்டனர்ஷிப்:
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சிறந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய வீரர்களே வைத்துள்ளனர். இந்தியாவின் சுனில் கவாஸ்கர் – திலீப் வெங்கர்சகர் இந்த சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளனர். இருவரும் இணைந்து 1978ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் 344 ரன்களை குவித்துள்ளனர்.