IND vs SL, 3rd ODI: கதகளி ஆடிய கோலி.. இலங்கை அணி காலி.. பிரமாண்ட இலக்கை நிர்ணயித்த இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளும் தீவிரம்:
தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டி-20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதலடைய முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய அணி பேட்டிங்:
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்களை சேர்த்தது. 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 42 ரன்கள் சேர்த்து இருந்தபோது, கருணரத்னே பந்துவீச்சில் அவுட்டானார்.
சுப்மன் கில் சதம்:
மறுமுனையில் நிதானமாக ஆடிய சுப்மன் கில், இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கோலி உறுதுணையக இருந்து ரன்களை சேர்க்க, கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, 89 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உடன் சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். தொடர்ந்து 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட, 116 ரன்களை சேர்த்து இருந்தபோது ரஜிதா பந்துவீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.
கோலி அதிரடி:
இதனிடையே, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சேர்த்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன்கில் ஆட்டமிழந்ததும் கோலி தனது ஆட்டத்தை வேகப்படுத்தினார். இதன் மூலம், அடுத்த 37 பந்துகளிலேயே 50 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், 85 பந்துகளிலேயே கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 46வது மற்றும் சர்வதேச போட்டிகளில் அடிக்கும் 74வது சதமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அதிரடியாக ஆடிய விரார் கோலி 150 ரன்களை அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உட்பட 166 ரன்களை எடுத்தார்
இமாலய இலக்கு:
இதனிடையே, மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் காரணமாக, இந்திய அணி 400 ரன்களை கடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை சேர்த்தது.