KL Rahul Century: போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்.. சதம் அடித்து இந்தியாவை தனி வீரனாக தூக்கி நிறுத்திய கே.எல். ராகுல்
KL Rahul Century: 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் இரண்டாயிரத்து 743 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 199. டெஸ்ட்டில் 8 சதங்களும் 13 அரைசதங்களும் விளாசியுள்ளார்.
IND Vs SA Test 1st Innings: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. இதில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொட்ரை 2-1 என்ற கணக்கில் வென்றது. டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் தொடங்கி மிடில் ஆர்டர் வரை சொதப்பி வந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்கள் சேர்க்குமா என்ற கேள்வி எழுந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா முதல் நாளில் மட்டும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதாவது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் எனப்படும் ரோகித், கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அஸ்வின் மற்றும் ஷர்துல் தகுர் ஆகியோரது விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டபோது இந்திய அணி 59 ஓவரிகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் மட்டும் 80 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் தனது அதிரடி ஆட்டத்தினால் சதம் விளாசினார். இந்திய அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டினை கைப்பற்றிய ரபாடாவின் ஒரே ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி தனது சதத்தினை எட்டினார் கே.எல். ராகுல். சதம் விளாசிய பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்த ராகுல் தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்து வெளியேறினார். கே.எல். ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 101 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 67.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த சதம் கே.எல். ராகுலின் 8வது சர்வதேச டெஸ்ட் சதம் ஆகும். மேலும் இதே மைதானத்தில் கே.எல். ராகுலின் இரண்டாவது டெஸ்ட் சதமாகும். இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் இரண்டாயிரத்து 743 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 199 ரன்கள். டெஸ்ட்டில் 8 சதங்களும் 13 அரை சதங்களும் விளாசியுள்ளார். இது இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் 18 அரைசதங்களும் விளாசியுள்ளார்.