IND vs SA: சர்வதேச டி20யில் புதிய சாதனை பட்டியலில் இணைந்த தீபக்-உமேஷ் ஜோடி.. என்ன சாதனை தெரியுமா?
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று இந்தோரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ரிலே ரோசோவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 227 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. முதல் இரண்டு போட்டியை வென்று இருந்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது 9வது விக்கெட்டிற்கு உமேஷ் யாதவ்-தீபக் சாஹர் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக தீபக் சாஹர் 3 சிக்சர்கள் விளாசினார். உமேஷ் யாதவ் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.
சர்வதேச டி20யில் 9வது விக்கெட்டிற்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி:
48- தீபக் சாஹர் மற்றும் உமேஷ் யாதவ் vs தென்னாப்பிரிக்கா, 2022
36- ரோகித் சர்மா மற்றும் ஜாகிர் கான் vs ஆஸ்திரேலியா 2010
29- தோனி மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் vs இங்கிலாந்து 2011
இந்த இருவரும் 9வது விக்கெட்டிற்கு ஜோடியாக 48 ரன்கள் விளாசினர். இதன்மூலம் ச்ர்தேச டி20-யில் 9வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனையை தீபக் சாஹர்-உமேஷ் யாதவ் படைத்துள்ளனர். இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோகித்-ஜாகிர் கான் 9வது விக்கெட்டிற்கு 36 ரன்கள் ஜோடியாக சேர்த்திருந்தனர். அந்தச் சாதனையை நேற்று தீபக் சாஹர்-உமேஷ் யாதவ் ஜோடி முறியடித்துள்ளது.
சர்வதேச டி20யில் 9வது வீரராக களமிறங்கி அதிக சிக்சர் விளாசிய இந்தியர்கள்:
3 சிக்சர்கள்- தீபக் சாஹர் vs தென்னாப்பிரிக்கா, 2022
2- இர்ஃபான் பதான் vs இலங்கை 2009
2- ஆஷிஷ் நெஹ்ரா vs இலங்கை, 2009
மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 9வது இடத்தில் களமிறங்கி ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை தீபக் சாஹர் படைத்துள்ளார். இவர் நேற்றைய போட்டியில் 3 சிக்சர்கள் விளாசினார். இதற்கு முன்பாக 2009ஆம் ஆண்டு இர்ஃபான் பதான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் 2 சிக்சர்கள் விளாசியிருந்தனர். அவர்கள் இருவரையும் தீபக் சாஹர் முந்தியுள்ளார்.
A dash of laughter does not hurt after the series win! ☺️#TeamIndia captain @ImRo45 & @DineshKarthik share a lighter moment. 👍#INDvSA pic.twitter.com/8WcTjcpOSF
— BCCI (@BCCI) October 4, 2022
நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் கிண்டல் அடித்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தினேஷ் கார்த்திக் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த விதம் தொடர்பாக ரோகித் சர்மா கிண்டல் செய்வது போல் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.