IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடிய கோலி! புது வரலாறு படைத்த இந்தியா! கடந்தாண்டு இதே நாள்!
கடந்தாண்டு இதே நாளில் பாகிஸ்தான் அணியை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வீழ்த்திய இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத சாதனைகள் பல அணிகளுக்கு எதிராக படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பெறும் வெற்றிகள் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில், கடந்தாண்டு இந்திய அணி இதே நாளில் புது வரலாறு படைத்தது.
ஆசிய கோப்பை:
இலங்கை மண்ணில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்தாண்டு நடைபெற்றது. அந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்தாண்டு இதே நாளான செப்டம்பர் 11ம் தேதி பாகிஸ்தானை கொழும்பு மைதானத்தில் எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. இதையடுத்து, முதலில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக ரோகித் சர்மா சிக்ஸரும், பவுண்டரிகளும் விளாச சுப்மன்கில் மறுமுனையில் நிதானமாக ஆடினார்.
கோலி - ராகுல் காம்போ:
மிரட்டலாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோகித்சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த சுப்மன்கில் 10 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் 58 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இருவரும் அவுட்டானதும் இந்தியாவை எளிதில் சுருட்டிவிடலாம் என்று எண்ணிய பாகிஸ்தானை கோலி – கே.எல்.ராகுல் கூட்டணி சிதைத்துவிட்டதே என்றே கூறலாம்.
2022ம் ஆண்டு முதல் தனது கம்பேக்கைத் தந்த விராட் கோலி 2023ம் ஆண்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக ஆட ஒரு கட்டத்தில் மைதானத்தில் நங்கூரமிட்டனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஷாகின் அப்ரீடி, நசீம் ஷா, அஷ்ரப், ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான் மற்றும் இப்திகார் அகமது எனு மாறி, மாறி பந்துவீச்சாளர்களை அழைத்து வந்தார்.
பாகிஸ்தானை பந்தாடிய கோலி - ராகுல் சதம்:
குறிப்பாக, பாகிஸ்தானின் பலமாக கருதப்பட்ட ஷாகின் அப்ரிடியையும், நசீம் ஷாவையும் இருவரும் அலட்சியமாக ஆடினார்கள். அவ்வப்போது பவுண்டரிகளும், தேவையான நேரத்தில் சிக்ஸரும் வர இந்தியாவின் ஸ்கோர் மளமளவென ஏறியது.
கே.எல்.ராகுல் நிதானமாக ஆட அரைசதம் விளாசிய பிறகு விராட் கோலி ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். கே.எல்.ராகுல் சிறப்பாக் ஆடி 100 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். மறுமுனையில் கோலியின் சதத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக விராட் கோலி 84 பந்துகளில் 100 ரன்களை விளாசி தனது 47வது சதத்தை பதிவு செய்தார். சதம் விளாசிய விராட் கோலி அடுத்து சந்தித்த 10 பந்துகளில் 22 ரன்களை விளாசினார்.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்களை எடுத்தது. விராட் கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஷாகின் அப்ரிடி 79 ரன்களையும், அஷ்ரப் 74 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.
புது வரலாறு படைத்த இந்தியா:
357 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிககு வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், சிராஜூம், பாண்ட்யாவும் கட்டுப்படுத்த சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பாகிஸ்தானை சுருட்டினார். முக்கிய வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னிலும், ரிஸ்வான் 2 ரன்னிலும் அவுட்டாக அகா சல்மான் – இப்திகார் ஜோடி பாகிஸ்தானை காப்பாற்ற எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
கடைசியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு சுருட்டியது. இதனால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவே ஆகும். குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 8 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்தாண்டு இந்தியா இதே நாளில் பெற்ற வெற்றியை இந்திய ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.