IND vs NZ: என்னதான் ஆச்சு? டெஸ்ட் போட்டியின் அடிப்படையை மறக்கிறதா இந்தியா?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்த இந்திய அணியின் பேட்டிங் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மிக எளிதாக முன்னேறிவிடும் என்று கணிக்கப்பட்ட இந்திய அணியின் நிலை நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு முழுவதும் பரிதாபமாக மாறி உள்ளது.
ஒயிட்வாஷ் ஆன இந்தியா:
இந்த தொடரில் எந்த ஒரு இடத்திலும் இந்திய அணி நியூசிலாந்தை விட சிறப்பாக செயல்படவில்லை. உண்மையில் கூற வேண்டுமென்றால் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி அனுபவத்திலும், திறமையிலும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்த அணியாகவே இருந்தது. இந்திய அணியில் ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, அஸ்வின், கே.எல்.ராகுல் என அனுபவ வீரர்கள் இருந்தனர்.
ஆனால், நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இல்லாமலே களமிறங்கினர். லாதம், வில் யங், மிட்செல், ரவீந்திரா, ப்ளிப்ஸ், கான்வே என இந்திய மண்ணில் டெஸ்ட் அனுபவம் மிக மிக குறைவாகவே இருந்த வீரர்களே களமிறங்கினர். ஆனால், டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த நூற்றாண்டில் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதன்முறை ஆகும்.
டெஸ்ட் போட்டியின் அடிப்படையை மறந்ததா இந்தியா?
இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததற்கு இந்தியாவின் பேட்டிங்கே பெரும்பான்மையான காரணம் ஆகும். குறிப்பாக, இந்திய வீரர்கள் ஆடிய பேடடிங் விதம் டெஸ்ட் போட்டிக்கான விதமாக இல்லை. ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளை டெஸ்ட் போட்டியானது மிகவும் சவால் ஆனது ஆகும். ஒரு கிரிக்கெட் வீரரின் பேட்டிங், பவுலிங் திறமை மட்டுமின்றி அவனது மன வலிமைக்கு சவால் அளிக்கும் போட்டியே டெஸ்ட் போட்டி ஆகும். நிதானமாக ஆடி ஆட்டத்தையே மாற்றும் திறமையை வெளிக்காட்டுவதே டெஸ்ட் போட்டியின் அடிப்படை ஆகும்.
சிவப்பு நிற பந்தை எதிர்கொண்டு களத்தில் நங்கூரமாய் நிற்பதும், நங்கூரமாய் நிற்கும் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதுமே பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் இடையே நடக்கும் யுத்தமாகவே டெஸ்ட் போட்டியில் காணப்படும். அப்படி களத்தில் நங்கூரமிட்டு நிற்பதற்கு பெயர் போன வீரர்களே இந்திய மண்ணில் உருவாகியவர்கள் ஆவார்கள். சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட், புஜாரா, ரஹானே என பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
நங்கூரமிடும் பேட்டிங் எங்கே?
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்களில் அப்படி ஒரு களத்தில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்திலான பேட்டிங்கை யாருமே வெளிப்படுத்தவில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வருவது போல பேட்டை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் சுழற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே பேட்டிங் செய்தனர். இந்திய அணியினர் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும்போது நெருக்கடியான சூழலில், களத்தில் நீண்ட நேரம் நின்று முதலில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கே சென்றது? என்ற கேள்வியே எழுகிறது.
ரிஷப்பண்ட் சேவாக் போன்ற வீரர். அவர் எப்போதுமே அடித்து ஆடும் அணுகுமுறை கொண்டவர். அதுதான் அவரது ஆட்டத்திறனும் கூட. அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற வீரர்கள் ஆடிய விதம் மிக மிக கவலை அளிக்கும் விதமாக இருந்தது.
கவலை தரும் கம்பீர்:
இளம் வீரர்களுக்கு களத்தில் நீண்ட நேரம் எப்படி நின்று ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்று கற்றுத்தர வேண்டிய விராட் கோலி, ரோகித் சர்மா பரிதாபமான நிலையில் அவுட்டாகி வெளியேறுவது ரசிகர்களை மேலும் வேதனை அடையச் செய்கிறது. டி20 போட்டி அணுகுமுறையை வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக பயன்படுத்தியது போல நியூசிலாந்து போன்ற அணிக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என்ற கம்பீரின் அணுகுமுறை முழுவதும் தோற்றுப்போகியுள்ளது.
குறிப்பாக, சொந்த மைதானத்தில் 146 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதும், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறுவதும் நம்ம இந்தியாவுக்கு என்னதான் ஆச்சு? என்று ரசிகர்களை புலம்ப வைத்துவிட்டது.
இன்னொரு டிராவிட், புஜாரா, லட்சுமணன் தேவை:
ஆல் ரவுண்டர்களான ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் எந்த தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் தொடர்களில் அசுரத்தனமாக ஆடுவதில் மட்டுமே இந்திய வீரர்கள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனரோ? என்ற கேள்வியே இவர்கள் ஆடும் விதத்தைப் பார்க்கும்போது மனதில் வந்து போகிறது. மேலும், ஆஸ்திரேலிய தொடரில் நெருக்கடியான சூழலுடன் செல்ல உள்ள இந்திய அணியில் அந்த தொடர் முடிந்த பிறகு ஏராளமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நியூசிலாந்து தொடர் இந்திய அணிக்கு மற்றொரு டிராவிட், மற்றொரு புஜாரா, மற்றொரு ரஹானே, மற்றொரு லட்சுமணன் போன்ற வீரர்கள் தேவை என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்திய அணிக்கு ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து மட்டும் வீரர்களை தேர்வு செய்யாமல் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.