IND vs NZ 2nd Test: இன்று தொடங்குகிறது இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்! கம்பேக் தருமா ரோகித் படை?
IND vs NZ 2nd Test: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் பெங்களூரில் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால், தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.
இன்று தொடங்கும் இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் தொடங்குகிறது. புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
இந்த போட்டியைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணியை காட்டிலும் இந்திய அணிக்குத்தான் சவால் அதிகளவில் உள்ளது. கடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி மீது ஏராளமான விமர்சனத்தை முன்வைத்தது. இதனால், இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வெலலும் பட்சத்தில் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்? பவுலிங்? எதைத் தேர்வு செய்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், பேட்டிங்கில் இந்திய அணி எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பேட்டிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
இந்திய அணியைப் பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் சொதப்பிய ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சர்பராஸ் கான் ஆகியோர் கடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடினர்.
ரிஷப்பண்ட் மற்றும் சர்பராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் நட்சத்திர மற்றும் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மிகப்பெரிய இன்னிங்சை ஆட வேண்டியது அவசியம் ஆகும். இந்திய அணிக்குள் சுப்மன்கில் வருவது அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
ஆல்ரவுண்டர்கள் அசத்துவார்களா?
கடந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் டெயிலண்டர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால், இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, அஸ்வின் பேட்டிங்கில் சொதப்பினர். இவர்கள் பின்வரிசையில் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை கான்வே, ரச்சின் ரவீந்திரா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களை விரைவில் ஆட்டமிழக்க வைக்க வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் லாதம், வில் யங், மிட்செல், ப்ளிப்ஸ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் இந்தியாவிற்கு கடும் சவால் ஏற்படும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை நியூசிலாந்தின் சவுதி, மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரோர்கி வலுவாக இருப்பதால் அவர்களை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது இந்தியாவிற்கு அவசியம். இந்திய பந்துவீச்சாளர்கள் கடந்த போட்டியில் பெரியளவு ஆதிக்கம் செலுத்தவில்லை. பும்ரா. சிராஜ், அஸ்வின், ஜடேஜா சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
கே.எல்.ராகுலா? சர்பராஸ் கானா?
இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த போட்டியில் ஆடாத சுப்மன்கில் மீண்டும் களமிறங்குவதால் ஒருவரை உட்கார வைக்க வேண்டியது அவசியம் ஆகும். கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக வாய்ப்பு கிடைத்த சர்பராஸ் கான் இரண்டாவது இன்னிங்சில் அபாரமான சதம் அடித்து அசத்தினார்.
ஆனால், கே.எல்.ராகுல் 2 இன்னிங்சிலும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங் மீது தொடர் விமர்சனம் எழுந்து வருகிறது. இதனால், ரோகித் சர்மா கே.எல்.ராகுலை உட்கார வைக்கப்போகிறாரா? சர்பராஸ் கானை உட்காரவைக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, ஜியோவில் நேரலையில் பார்க்கலாம்.