(Source: ECI/ABP News/ABP Majha)
Tim Southee : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை கடந்த டிம் சவுதி; உலக சாதனை..!
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை படைக்கும் 5-வது நியூசிலாந்து வீரர் இவர்.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை படைக்கும் 5வது நியூசிலாந்து வீரர் இவர் ஆவார்.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டி என விளையாட திட்டமிடப்பட்டது. இதில் டி20 தொடர் ஹர்திக் பாண்டியா தலைமையிலும், ஒருநாள் போட்டித் தொடர் ஷிகர் தவான் தலைமையிலும் நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கும் என பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே டி20 போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாண்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தனர்.
இருவரும் அரைசதம் அடித்த நிலையில் அணியின் ஸ்கோர் 124 ரன்களாக இருந்த போது, சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். அதனை அடுத்து ஷிகர் தவானும் அவுட் ஆக இந்திய அணி 124 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது.
அதன் பின்னர் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் அடுத்தடுத்து பெர்குஷன் பந்து வீச்சில் அவுட் ஆக, இந்திய அணி மேலும் தடுமாறி வந்தது. அதன் பின்னர், சஞ்சு சாம்சன் ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து அணியை வலுவாக்கி வந்தனர். அதன் பின்னர் இந்த கூட்டணியும் பிரிய, நிலைத்து ஆடி வந்த ஸ்ரேயஸ் 75 பந்தில் 4 ஃபோர், 4 சிக்ஸர் உட்பட 80 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்து 307 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் அடித்தனர். இறுதியாக வாஷிங்டன் சுந்தரும் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்து அதிரடிகாட்ட இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவியாக இருந்தது. 307 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியுள்ளது.
இந்த போட்டியில் 32வயதான நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுதி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் 200 ஒருநாள் விக்கெட்டுகளைக் கடந்த ஐந்தாவது நியூசிலாந்து வீரர் இவர். இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி சார்பில், டேனியல் வெட்டோரி 297 விக்கெட்டுகளும், மைல்ஸ் 240 விக்கெட்டுகளும், கிரிஸ் ஹாரிஸ் 203 விக்கெட்டுகளும், கிரிஸ் கேரின்ஸ் 200 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். அவர்கள் வரிசையில் டிம் சவுதி ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார். இவர் இதுவரை ஒருநாள் போட்டியில் 202 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டியில் 397 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 134 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.