IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
லீட்ஸில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் தோற்றதால் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்தும் சுப்மன்கில்லும் - இங்கிலாந்தின் அனுபவ வீரரும், கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் டாசிற்காக களத்தில் வந்தனர். இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இந்தியா பேட்டிங்:
இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. லீட்ஸ் மைதானத்தில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் இந்திய அணிக்காக இன்று சுப்மன்கில் தலைமையில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப்பண்ட், கருண் நாயர், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
புஜாரா இடத்தில் சுதர்சன், கோலி இடத்தில் சுப்மன்கில்:
புஜாரா இடத்தில் இன்று சாய் சுதர்சனும், விராட் கோலி இடத்தில் சுப்மன்கில்லும் களமிறங்குகின்றனர். இந்த போட்டி மூலமாக இந்திய அணிக்காக சாய் சுதர்சன் களமிறங்கியுள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் கருண் நாயருக்கு இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி, டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
லீட்ஸில் போட்டி நடக்கும் ஹெடிங்லே மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதாலே இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ் வேகத்திற்காக களமிறங்கியுள்ளனர். இவர்களுடன் சுழலில் ஷோயிப் பஷீர் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக உள்ளார். இவருடன் இணைந்து ஜோ ரூட்டும் சுழலில் அசத்துவார்.
காத்திருக்கும் சவால்:
மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ள நிலையில், ஆட்டத்தை இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் தொடங்க உள்ளனர். ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன்கில், கருண் நாயருக்கு இங்கிலாந்தில் போதிய அனுபவம் இல்லை. இவர்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்பதே இவர்கள் முன்பு உள்ள கேள்வி. கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, சிராஜ், ரிஷப்பண்ட் தங்களது அனுபவத்தை வெளிககாட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டி இளமையான இந்திய அணிக்கும், அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கும் நடப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.




















