Ind Vs Aus T20: இமாலய இலக்கை நிர்ணயம் செய்யுமா இந்தியா? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு!
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் கடைசி மற்றும் 5 வது டி 20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி 20:
ஐசிசி உலகக் கோப்பை தொடருக்குப் பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. அதன்படி, 5 டி20 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இது வரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
அதேபோல், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தோல்வியை தழுவிய இந்திய அணி நான்கவது போட்டியில் வெற்றி பெற்றது.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது இந்திய அணி. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் தான் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்று இந்திய அணியும், வெற்றியுடன் தாய் நாடு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் விளையாட உள்ளது.
முதலில் பேட் செய்யும் இந்திய அணி:
அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட் செய்யும் இந்திய அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் ), பென் ட்வார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா
இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்