IND Vs AUS: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?.. ராஜ்கோட்டில் இன்று 3வது ஒருநாள் போட்டி..!
ஆஸ்திரேலியா உடனான இன்றைய ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட், ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:
அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின், முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா, கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. தொடர்ந்து, கே.எல். ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
மூன்றாவது ஒருநாள் போட்டி:
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற உள்ள போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் தொடங்குகிறது. இதிலும் வென்று, ஆஸ்திரேலியாவை வட் வாஷ் செய்து தொடரை முழுமையாக கைப்பற்ற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியாவது பெற ஆஸ்திரேலியா முனைப்பு காட்டி வருகிறது. இதனால், இன்றைய போட்டிய்ல் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணி நிலவரம்:
முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் கோலி ஆகியோர் இந்த போட்டிக்காக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். அதேநேரம், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, ஷமி மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இடது கை பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அதேநேரம், கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமாக உள்ளது. பவுலிங் யூனிட்டில் பும்ரா மற்றும் ஷ்ர்தூல் தாக்கூர் ஆகியோர் இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி நிலவரம்:
இந்தியா உடனான தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தொடர்ந்து சொதப்பி வரும், ஆஸ்திரேலிய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இன்னும் ஃபார்முக்கு திரும்பாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால், இன்றைய போட்டியில் வென்று உலகக்கோப்பை தொடரில் நேர்மறையான எண்ணங்களுடன் களமிறங்க ஆஸ்திரேலிய அணி ஆர்வம் காட்டி வருகிறது.
மைதானம் எப்படி?
போட்டி நடைபெறும் ராஜ்கோட் பகுதியில் மழைக்கு இன்று வாய்ப்பில்லை என, வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சிறிய பவுண்டரி எல்லைகளை கொண்டு இருப்பதால், இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அங்கு நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் பேட்ட்ங் செய்த அணி தான் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உத்தேச அணி:
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்தூல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா உத்தேச அணி:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்