IND vs AUS 5th T20: ஆடாமா ஜெயிச்சோமடா.. ஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்தியா - இப்படி ஆகிடுச்சே?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.
மழையால் நின்ற ஆட்டம்:
2-1 என்று இந்திய அணி முன்னிலை பெற்றிருந்த சூழலில் இன்று இரு அணிகளும் மோதிய கடைசி டி20 போட்டி இன்று ப்ரிஸ்பேனில் நடந்தது. இந்திய அணியை இந்த போட்டியில் வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை சமன்படுத்தலாம் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் அபிஷேக் சர்மா - சுப்மன்கில் ஜோடி சிறப்பாக ஆடியது. குறிப்பாக, இந்த தொடர் முழுவதும் சொதப்பிய சுப்மன்கில் இன்று களமிறங்கியது முதலே பவுண்டரியாக விளாசினார். இதனால் இந்தியா ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்தது. இந்திய அணி 4.5 ஓவர்களிலே 52 ரன்கள் எடுத்தது. சுப்மன்கில் 16 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 29 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது.
தொடரை வென்ற இந்தியா:

இதனால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாமல் பெய்த காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அடுத்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
தொடர் முழுவதும் மழை:
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பங்கேற்ற ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டி20 தொடர் தொடங்கியது முதலே இரு அணிகளை காட்டிலும் மழையின் ஆதிக்கமே அதிகளவில் இருந்தது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதற்கு மழையும் ஒரு காரணம் ஆகும். ஆனாலும், அடுத்தடுத்த 2 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. இந்த சூழலில் இன்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டது.
தென்னாப்பிரிக்க தொடர்:
பும்ரா, கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஆடியிருந்தாலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்திய அணி விரைவில் இந்தியா திரும்ப உள்ளது. இங்கே உள்நாட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணி தயாராக உள்ளது.




















