IND vs AUS: டிராவை நோக்கி காபா டெஸ்ட்! WTC இறுதிப்போட்டிக்குச் செல்லுமா இந்தியா?
IND vs AUS: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ப்ரிஸ்பேன் டெஸ்ட் டிராவை நோக்கிச் செல்லும் நிலையில் இந்திய அணியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
டிராவை நோக்கி பிரிஸ்பேன் டெஸ்ட்:
இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் மழைக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட், ஸ்மித் சதம் அடித்து ஆஸ்திரேலியா 445 ரன்களை குவிக்க, கே.எல்.ராகுல் – ஜடேஜா தவிர மற்றவர்கள் சொதப்ப, கடைசி வீரராக வந்த ஆகாஷ் தீப் 31 ரன்கள் விளாசி இந்திய அணியை பாலோ ஆன் செய்வதில் இருந்து காப்பாற்றினார்.
இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று ப்ரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வேண்டி இருப்பதாலும் இன்று கடைசி நாள் என்பதாலும் இந்த போட்டி டிராவில் முடியவே வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
இறுதிப்போட்டிக்குச் செல்லுமா இந்தியா?
இந்த நிலையில், இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு? எப்படி இருக்கும் என்பதை கீழே காணலாம்.
- இந்த போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்படும்.
- இதனால், இந்திய அணியின் புள்ளிகள் 114 ஆக அதிகரிக்கும்.
- இந்திய அணியின் சதவீதமும் 55.88 சதவீதமாக அதிகரிக்கும்.
- இந்திய அணியின் புள்ளிகளும், சதவீதமும் அதிகரிப்பது போலவே ஆஸ்திரேலிய அணியின் புள்ளிகளும், சதவீதமும் அதிகரிக்கும்.
- தற்போதைய புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 2வது இடத்தில் இருப்பதால் அவர்கள் 2வது இடத்திலேயே நீடிப்பார்கள்.
- இந்திய அணி 3வது இடத்திலே நீடிக்கும்.
- தென்னாப்பிரிக்க அணி தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்கள்.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்ல வேண்டும் என்றால் அடுத்து நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மெல்போர்ன் மற்றும் சிட்னி மைதானத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு மிக மோசமானதாக மாறிவிடும்.
இரண்டு போட்டிகளிலும் தோற்றால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் அடுத்து தாங்கள் ஆடும் டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே இந்திய அணி இறுதிப்போட்டி கனவு நனவாகும்.