(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS 1st Test: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் நாக்பூர் மைதானம் எப்படி..? வரலாறு சொல்வது என்ன?
IND vs AUS Nagpur Test Pitch Report: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாக்பூரில் உள்ள மைதானத்தில் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு 2008ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில்தான் தொடங்க உள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 2008ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியாவும் மோதிய அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிக ரன்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரராக வீரேந்திர சேவாக் உள்ளார். அதிரடி ஆட்டக்காரரான சேவாக் இந்த மைதானத்தில் இதுவரை 6 இன்னிங்சில் 357 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 59.50 ஆகும். இந்த மைதானத்தில் அவர் 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட்கோலி 354 ரன்களுடன் உள்ளார். நான்கு இன்னிங்ஸ் மட்டுமே இந்த மைதானத்தில் ஆடியுள்ள விராட்கோலியின் சராசரி 88.50 ஆகும். 2 சதங்களை இந்த மைதானத்தில் விராட்கோலி விளாசியுள்ளார்.
அதிக விக்கெட்டுகள்:
இந்த மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த மைதானத்தில் அஸ்வின் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சராசரி ரன்கள்:
போட்டி நடைபெற உள்ள நாக்பூர் மைதானத்தில் முதல் இன்னிங்சில் 345 ரன்கள் வரை குவிக்கலாம் என்றும், இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் வரை குவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனிநபர் அதிகபட்சம்:
நாக்பூர் மைதானத்தில் தனிநபர் அதிகபட்சம் என்ற சாதனையை தெ.ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா தன்வசம் வைத்துள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 473 பந்துகளில் 253 ரன்களுடன் உள்ளார். அவரது இரட்டை சதத்தால் இந்தியா அந்த போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிறந்த பந்துவீச்சு:
இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை ஜேசன் க்ரெஜா பதிவு செய்துள்ளார். 2008ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான க்ரெஜா 215 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையை இந்திய வீரர் அஸ்வின் தன்வசம் வைத்துள்ளார். 2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அணியின் அதிகபட்ச ரன்கள்:
2017ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முரளி விஜய், புஜாரா , ரோகித்சர்மா ஆகியோரின் சதத்தால் இந்தியா 610 ரன்களை குவித்ததே ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாகும். அந்த போட்டியில் இந்தியா 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் குறைந்தபட்ச ரன்:
இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு எதிராக 79 ரன்களில் சுருண்டதே குறைந்த பட்ச ரன்னாகும்.
சிறந்த பார்டனர்ஷிப்:
2010ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆம்லா – ஜேக் காலீஸ் ஜோடி 340 ரன்கள் குவித்ததே சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.
மேலும் படிக்க: ICC WTC 2023 Final: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவது எப்போது? முழு விபரம் உள்ளே..!
மேலும் படிக்க: Women's T20 World Cup 2023: ’தீரா பசியில் இந்தியா இருக்கிறது, தோனி, கங்குலியை வழியில் கோப்பையை தூக்குவோம்’.. ஹர்மன்ப்ரீத் கவுர்!