ICC Fined Gill: புலம்பிய கில்.. 115 சதவீதம் அபராதம் விதித்த ஐ.சி.சி..! சோகத்தில் இருக்கும் இந்திய அணிக்கு அபராதம்..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது.
புலம்பிய கில்:
லண்டனில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால், இந்திய அணி வீரர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு மேலும் ஒரு இடியாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணிக்கு 100% அபராதம்:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் வீசப்பட வேண்டிய ஓவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், குறைந்த ஓவர்களை வீசியதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 ஓவர்களை குறைவாக வீசிய இந்திய அணிக்கு 100 சதவிகிதமும், 4 ஓவர்களை குறைவாக வீசிய ஆஸ்திரேலிய அணிக்கு 80 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஐசிசியின் குற்றச்சாட்டுகளை இரு அணி வீரர்களுமே ஏற்கனவே ஒப்புக்கொண்டதால், மேற்கொண்ட விசாரணையின்றி இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத விவரம்:
ஐசிசி விதிகளின்படி, ஒரு அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பின்பற்றினால், அந்த அணி தவறவிட்ட ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் ஊதியத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில் இந்திய அணி 5 ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீச தவறியதால், அனைத்து வீரர்களுக்கும் 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில்லிற்கு கூடுதல் அபராதம்:
இதனிடையே, போட்டியில் வழங்கப்பட்ட நடுவரின் தீர்ப்பை விமர்சிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த இந்திய வீரர் சுப்மன் கில்லிற்கு 15 சதவிகிதம் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது ஒரு டெஸ்ட் போட்டிக்கான கட்டணத்திலிருந்து 115 சதவிகிதத்தை சுப்மன் கில் தற்போது அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது.
கில் செய்தது என்ன?
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், 444 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது. அப்போது சுப்மன் கில் 18 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப்-சைடில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்தார். ஆனால் இந்த கேட்ச் கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
க்ரீன் தரையோடு சேர்த்து பந்தைபோல் பிடிப்பதுபோல தெரிந்தது. உடனடியாக 3வது நடுவரிடம் முடிவுக்குப் போக அவரும் அவுட் என அறிவித்தார். நடுவரின் இந்த முடிவுக்கு இந்திய அணி ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுப்மன் கில்லும் தான் ஆட்டமிழந்தது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்த புகைப்படத்தைப் பதிவிட்டு ‘தலையில் அடித்துக் கொள்ளும்’ ஸ்மைலியை கேப்ஷனாக இருந்தது. இதற்காக தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.