ICC Champions Trophy 2025: உலகக் கோப்பையில் டாப் 7 அணிகளே தகுதி.. 2025 சாம்பியன் டிராபிக்கு அப்டேட் கொடுத்த ஐசிசி.. சிக்கலில் இங்கிலாந்து!
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள், 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகின்ற 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐசிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள், 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
ESPNcricinfo படி, உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் 7 அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும். போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நேரடியாக தகுதிபெறும். இந்த விதியானது கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐசிசி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
எந்தெந்த அணிகள் தகுதிபெறும்..?
சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற ஐசிசி நிர்ணயித்த விதிகளின்படி, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து போன்ற அணிகள் நடப்பு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாததால், போட்டியில் பங்கேற்க முடியாது.
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தரவரிசையில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் தற்போது டாப்-8 இல் இல்லை. இந்த அணிகள் அனைத்தும் உலகக் கோப்பையில் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து 10வது இடத்திலும், வங்கதேசம் 9வது இடத்திலும் உள்ளன. உலகக் கோப்பை முடியும் வரை இதே நிலை நீடித்தால், இந்த இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாது. உலகக் கோப்பையில் குரூப் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு முதல் ஏழு இடங்களைப் பிடித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில், இங்கிலாந்துக்கு இது மிகப்பெரிய அவமானமாக இருக்கும். ஏனெனில் இங்கிலாந்து அணி கடந்த 2019ல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையையும், கடந்த 202ல் நடந்த டி20 உலகக் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
கொண்டு வரப்பட்ட புதிய விதி:
கடந்த 2021 நவம்பர் மாதத்தில் புதிய சுழற்சியில் (2024-31) ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்புக்கும் புதிய விதி ஒன்றை ஐசிசி அறிவித்தது. அதில், வருகின்ற 2025 மற்றும் 2029 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டு பதிப்புகளிலும் எட்டு அணிகள் பங்கேற்கும் என ஐசிசி கூறியிருந்தது. போட்டியில் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும். இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில், வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
முன்பு எந்த விதி இருந்தது..?
சாம்பியன்ஸ் டிராபியின் 2013 மற்றும் 2017 பதிப்புகளுக்கான கட்-ஆஃப் படி ஒருநாள் தரவரிசையில் முதல் எட்டு அணிகள் இந்த நிகழ்வுக்கு தகுதி பெற்றன. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்த உலகக் கோப்பையில் முதல் ஏழு அணிகள் தகுதி பெறுவதற்கான முடிவு முதலில் ஐசிசி தலைமை நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது, அதன் பிறகு ஐசிசி வாரியம் பரிந்துரையை அங்கீகரித்தது.